புத்தாண்டு முதல் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை அல்ல ஒவ்வொரு வாரமும் திருத்தப்படும்..!
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் எண்ணெய் விலையில் உயர்வு ஏற்படும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் திடீரென ஏற்படும் கூடுதல் செலவுகளை சிலிண்டர் விலை மீது திணிக்க இயலாது.
எனவே வாரத்துக்கு ஒரு முறை சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதாகவும், அதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய நடைமுறை மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.டிசம்பர் மாதத்தில் சமையல் சிலிண்டர் இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்து வாரத்துக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 1ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. அதற்கு முந்தைய மாதங்களில் சமையல் சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சிலிண்டர் விலை டெல்லியில் 594 ரூபாயாகவும், சென்னையில் ரூ.610 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும், மும்பையில் ரூ.594 ஆகவும் இருந்தது. பின்னர் திடீரென்று டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. சிலிண்டர் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 50 ரூபாய் வரையில் உயர்த்தி அறிவித்தன.
புதிய விலை நிலவரங்களின் படி, மானியமில்லா சமையல் சிலிண்டரின் விலை டெல்லியில் 644 ரூபாயாக உள்ளது. கொல்கத்தாவில் 670.50 ரூபாய்க்கும், மும்பையில் 660 ரூபாய்க்கும், சென்னையில் 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சிலிண்டர் விலை 30 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இன்னும் சில வாரங்களுக்குள் ஒவ்வொரு வாரமும் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.