டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர்8 போட்டியில் சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்டியது.
டி20 உலக கோப்பை சூப்பர்8 சுற்றில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கி இந்திய அணியை கவுரமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார் சூர்யகுமார் யாதவ்
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்8 சுற்று போட்டி பார்படாஸில் இருக்கும் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
டாஸ் தங்களுக்கு சாதகமாக விழுந்திருந்தால் பேட்டிங் எடுத்திருப்போம் என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் தெரிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் தொடங்கியபோது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல் சொதப்பினர்.
டி20 உலக கோப்பை தொடங்கியது முதல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான விராட் கோலி - ரோகித் சர்மா பார்ட்னர்ஷிப் மிக மோசமாக இருந்தது. அது இந்த போட்டியிலும் தொடர்ந்தது. 13 பந்துகள் விளையாடிய ரோகித் சர்மா 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
விராட் கோலி 24 ரன்களும், ரிஷப் பன்ட் 20 ரன்களும் எடுத்து அவுட்டாக, 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் நங்கூரம்போல் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று கொண்டு அதிரடியாக ஆட இந்திய அணி நல்ல ஸ்கோரை நோக்கி முன்னேறியது.
சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு பக்கபலமாக ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 150 ரன்களை கடந்தது.
முடிவில் இந்திய அணி 20 ஓவர்கள் விளையாடி 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான், ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.