நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் பிறந்த நாள்! ஒரு பார்வை!

சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 

Last Updated : Apr 16, 2018, 12:48 PM IST
நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் பிறந்த நாள்! ஒரு பார்வை! title=

சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 

1896-ம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி இறந்தார். இதனால் சாப்ளினின் தாய் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928-ம் ஆண்டில் இறந்தார்.

சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903-ம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். 

இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912-ம் ஆண்டு அமெரிக்கா வந்தடைந்தார். 

தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. இவர் 1919-ம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார்.

1927-ம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.

இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார். 

சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக "மாடர்ன் டைம்ஸ்" (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. 

அக்டோபர் 23 1918-ம் ஆண்டு இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-ம் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததது. 

சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-ம் ஆண்டு ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார்.

சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். 

> சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.
> 1972 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 
> மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். 
> 1985-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது.
> 1994-ம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார்.
> 1992-ம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
> 2005-ம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்"கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள்.

Trending News