ஆடியில் அம்மனை வழிபடுவதற்கான காரணம் என்ன? அரக்கனுக்கும் அருளிய அன்னை வழிபாடு!

Aadi Month Amman Worship : அன்னை பார்வதியின் பரிவார தேவதை உத்தாலகுசுமையை ஏமாற்ற அரக்கன் ஆடி எடுத்த கோலம்!  ஆடிக் காற்றில் பஞ்சாய் பறக்க வைத்த சிவபெருமான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2024, 04:29 PM IST
  • ஆடியில் அம்மனை வழிபடுவதன் பின்னணி!
  • ஆடி அரக்கனை அழித்த சிவன்
  • அரக்கனுக்கு அருளிய மாகாளி
ஆடியில் அம்மனை வழிபடுவதற்கான காரணம் என்ன? அரக்கனுக்கும் அருளிய அன்னை வழிபாடு! title=

தமிழர்களுக்கு ஆடி மாத வழிபாடு என்பது மிகவும் சிறப்பானது. தெய்வங்களை வணங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த மாதத்தில் வேறு எந்த சுப நிகழ்ச்சிகளும் நடத்தாமல் இருப்பது தமிழர் மரபு. அதனால் தான் அம்பாளை வழிபட உகந்த மாதம் எது என்று கேட்டால் ஆடி மாதம் என்று சொல்வோம். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை ஆடி பதினெட்டு, ஆடி பூரம், ஆடி பௌர்ணமி, நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம் என இந்த மாதம் முழுவதும் பூஜைகளும், திருவிழாக்களும் களைகட்டும்.

அதிலும், இந்த மாதம் தானம் செய்வது குறிப்பாக ஆடியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி அதனை பக்தர்களுக்கு விநியோகிப்பது நல்லது என்ற நம்பிக்கையும் உண்டு. வழிபாட்டிற்கு ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது என இந்திய கலாச்சாரம் கூறுகிறது.

ஆடி என்றாலே அம்மன் வழிபாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அம்மன் என்றால், சக்தி, லட்சுமி, சரஸ்வதி என அனைத்து பெண் தெய்வங்களையும் ஆடி மாதத்தில் வணங்குகிறோம். ஆடி மாத வழிபாடி எப்படி, எதற்காக தொடங்கியது என்பதை தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?

ஆடியில் அம்மன் வழிபாடு
உண்மையில் ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். அந்த அரக்கன் சிவனின் கைலாயத்திற்கு வந்திருந்த சமயத்தில் அன்னை பார்வதி அங்கு இல்லை. பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை என்ற பரிவார தேவதை கைலாயத்தில் இருந்தார். அவரது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்த ஆடி, பாம்பு வடிவில் கைலாயத்திற்குள் திருட்டுத்தனமாக சென்றுவிட்டான்.

அரக்கனின் வம்பு அத்துடன் முடியவில்லை. ஆடி, ஆடியபாதன் சிவன் இருக்கும் இடத்திற்கு சென்றதும், சிவனின் மனைவி பார்வதியாக உருவம் எடுத்தான். மூவுலகையும் அறிந்த முக்கண்ணன் சிவன், அசுரன் வந்திருப்பதை அறியாதது போல, பார்வதி வடிவில் இருந்த ஆடியை அருகில் அழைத்தார். ஆடி, சிவனை நெருங்கியதும், தனது திரிசூலத்தால் அரக்கனை அழித்தார் சிவபெருமான்.

சிவ மகாபுராணத்தில் ஆடி என்ற அரக்கன் தொடர்பான தகவல்களும் ஆடியின் வதமும் இடம்பெற்றுள்ளது. பார்வதி அன்னையை நினைத்தாலே மனம் உருகி ஆசி வழங்கும் அன்னை, தன்னுடைய உருவத்தை எடுத்தவருக்கு கருணை காட்டாமல் பரிதவிக்க விடுவாரோ?

அரக்கனின் பாவத்தை மன்னித்த பார்வதி தேவி, ஆடிக்கு நற்கதி வழங்கினாள். அதனால் தான் ஆடி மாதம் முழுவதும் அன்னை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரக்கனே அன்னையாக வடிவம் எடுத்ததால், ஒரு மாதத்திற்கே ஆடி என்று பெயர் ஏற்பட்டது. ஆடி மாதத்தில் அம்மனை பக்தியுடன் வழிபட்டால், அன்னை ஆடி அரக்கனுக்கு அருள் புரிந்து தவறை மன்னித்து நற்கதி அளித்தது போல், பக்தர்களின் பாவங்களை மன்னித்து அருள்புரிவாள் என்பது நம்பிக்கை.

ஆடியில் அன்னை வழிபாட்டுக்கு மட்டுமல்ல, அய்யன் சிவபெருமான், சிவமைந்தன் முருகனை வணங்க உகந்த மாதமாகும். ஆடியில் பக்தர்களுக்கு அருள் புரிவதில் சிவன், பார்வதி முருகன் ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடி மாதத்தில் பக்தி சிரத்தைஉடன் வழிபட்டு கடவுள்களின் ஆசிகளை பெறுவோம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? ஆடி கிருத்திகையில் பக்தனுக்கு அருள் புரியும் முருகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News