குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் அருகில், இந்திய கிர்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவின் தாத்தா சான்டோக் சிங் உடல் இறந்தப்படி கண்டெடுக்கப்பட்டது.
இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெசலிஸ்ட் ஜஸ்பிரிட் பும்ரா. குஜராத்தைச் சேர்ந்த இவர் தன் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு அறிமுகமானார்.
கடந்த 2016 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகி தற்போது வரை அசத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு இவரின் தாத்தா ``நான் அகமதாபாத்தில் 3 தொழிற்சாலைகளை வைத்து நடத்தி வந்தேன். இதனை என் மகனும் பும்ராவின் அப்பாவுமான ஜஸ்பீர் சிங் நிர்வகித்து வந்தார். அவர் 2001-ம் ஆண்டில் இறந்தவுடன், அதனை கவனிக்க ஆளில்லாமல் தொழில் நஷ்டமடைந்தது. அப்புறம் உத்தரகாண்ட் வந்தேன். இங்கே வந்து நாலஞ்சு வேன்களை வாங்கி தொழில் தொடங்கினேன். அதுவும் சரியாக லாபம் கிடைக்காமல் மிகவும் நஷ்டம் ஆகிவிட்டது. எல்லாம் நஷ்டம் அடைந்துவிட்டதால் இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் பேரனை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவன் சிறிய வயதில் இருந்தே நன்றாக கிரிக்கெட் விளையாடுவான். இப்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து விட்டான். அவனை என்னால் டிவியில் தான் பார்க்க முடிகிறது. அவன் நன்றாக விளையாட நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறேன். இறப்பதற்குள் என் பேரனை பார்க்க வேண்டும்`` என பும்ராவின் தாத்தா சான்டோக் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் 84 வயதான சாண்டோக் சிங் டிசம்பர் 1 ம் தேதி உத்தரகண்டிலிருந்து அகமதாபாத்திற்கு வந்தார். டிசம்பர் 6 ம் தேதி பும்ராவின் பிறந்தநாள் இருந்தது. அவர் பும்ராவை சந்திக்கவே அகமதாபாத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் பும்ராவை சந்திக்க முடியவில்லை.
அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதையடுத்து போலீஸ் அவரை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் அவரது உடல் சபர்மதி ஆற்றின் அருகில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை மீட்கப்பட்டது.