IPL 2019 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 48-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்த துவங்கினர். துவக்க வீரர் டேவிட் வார்ணர் 81(56) ரன்கள் குவித்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய போதிலும் குறைந்த பந்தில் நிறைவான ரன்களை குவித்து சென்றனர்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அஷ்வின் மற்றும் மொகமது ஷமி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரர் லோகேஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 79(56) குவித்த போதிலும், இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடு வெளியேற பஞ்சாப் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது. நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ் கெயில் 4(3) ரன்கள் மட்டுமே குவித்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 167 ரன்கள் மட்டுமே குவித்த பஞ்சாப் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.