Gujarat Fake IPL: போலி ஐபிஎல் மூலம் ரஷ்ய கும்பலுக்கு மொட்டையடித்த குஜராத் கில்லாடிகள்

போலி ஐபிஎல் மூலம் ரஷ்ய சூதாட்டக்காரர்களை மொட்டையடித்த குஜராத் மோசடி கும்பலை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2022, 02:53 PM IST
  • குஜராத்தில் நடைபெற்ற போலி ஐபிஎல்
  • ரஷ்யா சூதாட்டக்காரர்களை ஏமாற்ற திட்டம்
  • வசமாக சிக்கிய கும்பலை கைது செய்தது காவல்துறை
Gujarat Fake IPL: போலி ஐபிஎல் மூலம் ரஷ்ய கும்பலுக்கு மொட்டையடித்த குஜராத் கில்லாடிகள் title=

உலகளவில் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியிலேயே சூதாட்டம், மோசடி என புகார்கள் என வரிசைகட்டும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று, போலியாக ஒரு ஐபிஎல் தொடரையே நடத்தி கல்லா கட்ட நினைத்திருக்கிறார்கள். இதற்காக மெகசானா மாவட்டத்தில், வாட்நகரில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து, விளையாடுவதற்கு தினக்கூலிக்கு ஆள் பிடித்து, போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஹெச்டி கேமாராவை வாடகைக்கு எடுத்து போலி ஐபிஎல் தொடரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | பாகிஸ்தானுடன் மோத தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி

போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் தினக்கூலி பேசப்பட்டுள்ளது. மும்பை, சென்னை மற்றும் குஜராத் அணிகளின் உடைகளை அணிந்து இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று அணிகள் விளையாடியிருந்தாலும் மொத்தம் 21 பேர் மட்டுமே அங்கிருந்துள்ளனர். ஜெர்சியை மாற்றி போட்டுக்கொண்டு வெவ்வேறு அணிகளின் பெயரில் களத்தில் இறங்கி விளையாடி இருக்கிறார்கள். அவர்கள் விளையாடிய இந்த போலி ஐபிஎல் போட்டிகள் எல்லாம் யூடியூப்பிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய சூதாட்டக்காரர்களை நம்ப வைப்பதற்காக இணையத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போட்டியைக் கண்டுகளிப்பது போன்ற ஆரவார ஒலியை பதவிறக்கம் செய்து, போட்டியில் ஒளிபரப்பியுள்ளனர். மேலும், ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்கோர் கார்டுகள் காபி அடித்து சிஜி செய்த மோசடி கும்பல், கிரிக்கெட் கமெண்டரிக்கு ஹர்ஷா போக்லே போல் பேசும் ஒருவரை தேடிப் பிடித்து வந்து கமெண்டரி செய்ய வைத்துள்ளனர். 

ரஷ்ய மோசடி கும்பல் சொல்வதுபோல் போட்டி நடக்க வேண்டும் என்பதற்காக வாக்கி டாக்கி மூலம் கள நடுவருக்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் சிக்னல் கொடுத்துவிடுவார்கள். அதற்கேற்ப அவர், பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனிடம் சிக்னலை தெரிவிக்க, சிக்னலுக்கு ஏற்ப பந்து வீசப்பட்டு பவுண்டரி மற்றும் சிக்சர்கள் அடிக்கப்படும். ஆனால், பந்து எங்கு சென்றது என்பதெல்லாம் யூ டியூபில் காண்பிக்கப்படாது. தனக்கு வந்த சிக்னலுக்கு ஏற்ப பவுண்டரியா? சிக்சரா? என்பதை கையை உயர்த்தி காண்பித்துவிடுவார் நடுவர். 

லீக் போட்டிகள் எல்லாம் முடிவடைந்து காலிறுதிப் போட்டி சென்னை பைட்டர்ஸ் அணிக்கும், காந்திநகர் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்போது தான் இந்த மோசடியை மெகசானா காவல்துறை மோப்பம் பிடித்துள்ளது. உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கிய அவர்கள், வாட்நகர் பண்ணையில் நடைபெறும் போலி ஐபிஎல் போட்டி இடத்திற்கு சென்று மோசடி கும்பலைச் சேர்ந்த சோயிப் தாவ்தா, மஹ்மத் சாகிப் சைஃபி, மஹ்மத் அபு பக்கர் கோலு மற்றும் சாதிக் தாவ்தா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் வந்த தகவல்கள் தான் வேற ரகம்.

மேலும் படிக்க | மிஸ் பண்ணிடீங்களே ரோகித்! ஏங்கும் ரசிகர்கள்

சோயிப் தாவ்தாவுக்கு ரசியாவில் வேலை செய்யும்போது சூதாட்ட கும்பல்கள் பழக்கமாகியுள்ளனர். அவர்களிடம் கிடைத்த ஐடியாவில் இந்தியாவுக்கு திரும்பிய அவர், குஜராத்தின் மூளையில் இருக்கும் கிராமத்தில் இப்படியான போட்டியை ஏற்பாடு செய்துள்ளார். காலிறுதிவரை நடத்தப்பட்ட போட்டிக்கு அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இன்னும் எஞ்சிய போட்டிகள் நடத்தப்பட்டு இருந்தால் இன்னும் சில லட்சங்களை போலி ஐபிஎல் கும்பல் வருமானமாக்கியிருக்கும். தற்போது காவல்துறையின் விசாரணையில் சிக்கி, சூதாட்ட புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கூலிக்கு கிரிக்கெட் விளையாட வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக்காக நடத்தப்பட்ட போட்டி என்று எங்களுக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். தினக்கூலிக்கு சென்றால் 300 ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைக்கும் நிலையில், 400 ரூபாய் கிடைப்பதால் விளையாட ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை பதிவு செய்து கொண்ட காவல்துறை, அடுத்தக்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. பிரபலமான ஐபிஎல் போட்டி தொடரை வைத்தே ரஷ்ய சூதாட்டக்காரர்களுக்கு குஜராத்தைச் சேர்ந்தவர்கள் விபூதி அடிக்க நினைத்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னுடைய பெயரில் ஒருவர் கமெண்டரி செய்ததை அறிந்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, தன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என நகைசுவையாக தெரிவித்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News