IND vs NZ: சதமடித்து மிரட்டிய சூர்யகுமார்... நியூசிலாந்தை அப்படியே சுருட்டிய இந்தியா!

நியூசிலாந்த அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 20, 2022, 05:15 PM IST
  • நியூசி., பந்துவீச்சாளர் டிம் சௌதி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.
  • சூர்யகுமார் யாதவிற்கு இது 2ஆவது சர்வதேச டி20 சதம்.
  • தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
IND vs NZ: சதமடித்து மிரட்டிய சூர்யகுமார்... நியூசிலாந்தை அப்படியே சுருட்டிய இந்தியா! title=

உலகக்கோப்பை தோல்விக்கு பின், கையோடு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. 

இந்தியா - நியூசிலாந்து இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடம் உதைவாங்கி வெளியேறியிருந்தது. இந்த தொடருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

டி20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்க உள்ளனர். இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கடந்த நவ. 18ஆம் தேதி நடக்க இருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. 

மேலும் படிக்க | இதற்காக தான் ரோஹித் சாஹலை அணியில் எடுக்கவில்லை! உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!

மௌண்ட் மங்கலாயின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடி இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் - இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர். 

மீண்டும் பெயிலான பண்ட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்தார். இஷான் சற்றுநேரம் தாக்குபிடித்து 36 (31) ரன்களை குவித்தார். விராட் கோலி களமிறங்கும் மூன்றாவது இடத்தில், சூர்யகுமார் யாதவ் வந்து சிறப்பாக ஆடினார். 

ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்த பின், பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ்,  அனைவரின் பந்துவீச்சை நாலாப்புறம் சிதறடித்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், அடுத்த 17 பந்துகளில் அதாவது தனது 49ஆவது பந்தில் சதத்தை பதிவு செய்தார். இது அவரின் இரண்டாவது சர்வதேச டி20 சதமாகும். 

மறுமுனையில் பாண்டியா 13 பந்துகளில் 13 ரன்களை மட்டும் எடுத்து கடைசி ஓவரில் வெளியேறினார். அடுத்தடுத்து, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அவுட்டாக, டிம் சௌத்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவரின் இரண்டாவது டி20 ஹாட்ரிக் சாதனையாகும். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. மேலும், சூர்யகுமார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 (51) ரன்களை எடுத்திருந்தார். 

ஹூடா நம்பிக்கை 

192 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. முதல் ஓவரின் 2ஆம் பந்திலேயே ஃபின் ஆலன் டக்-அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து, டேவான் கான்வே உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தனர். 

இந்த ஜோடி 56 ரன்களை குவித்தபோது, கான்வே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சஹால், ஹூடா, சிராஜ் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும், 52 பந்துகளில் 61 ரன்களை குவித்திருந்த கேன் வில்லியம்சன் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அந்த அணியின் நம்பிக்கை ஒட்டுமொத்தமாக தகர்ந்தது.  18ஆவது ஓவரில் அவர் 7 விக்கெட்டாக வெளியேறிய நிலையில், தீபக் ஹூடா வீசிய 19ஆவது ஓவரில் மீதம் இருந்த மூன்று பேரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 

இதனால், 18.5 ஓவர்களில் 126 ரன்களை மட்டும் எடுத்து நியூசிலாந்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சஹால், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வானார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை மறுதினம் (நவ. 22) நடைபெற உள்ளது. தற்போது தொடர் 1-0 என்ற கணக்கில் உள்ளதால், அடுத்த போட்டியை, இந்தியா வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கும். மறுப்புறம் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்ய போராடும் என்பதும் நிதர்சனம். 

மேலும் படிக்க | IND vs BAN: பங்களாதேஷ் தொடரில் இடம் பெறத் தகுதியில்லாத 3 இந்திய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News