டெல்லி: பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் நேற்று 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதனையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 118, லதாம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் தரப்பில் மிஸ்ரா, பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா.
ரோகித் சர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் வந்த விராட் கோஹ்லி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரகானே (28), மணீஷ் பாண்டே (19 ) எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேதர் ஜாதவ் 41 ரன்கள் எடுத்த நிலையில் பெவுலியன் திரும்பினார். டோணி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் அக்சார் பட்டேல் (17), அமித் மிஸ்ரா (1) அடுத்தடுத்து அவுட்ஆகினர். இதனால் இந்தியா 49.3 ஓவரில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட் மற்றும் கப்தில் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்