CSK vs GT: ஐபிஎல் 2023 பைனலுக்கு செல்லப்போவது யார்? குருவிடம் தோற்காத சிஷ்யன்..! தோனியின் மாஸ்டர் பிளான்

ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்து பிளே ஆஃப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. முதல் பிளே ஆஃப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 23, 2023, 06:46 AM IST
  • ஐபிஎல் 2023 பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்
  • சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்
  • இதுவரை குஜராத் அணியை வெல்லாத சிஎஸ்கே
CSK vs GT: ஐபிஎல் 2023 பைனலுக்கு செல்லப்போவது யார்? குருவிடம் தோற்காத சிஷ்யன்..! தோனியின் மாஸ்டர் பிளான் title=

சென்னை - குஜராத் பலப்பரீட்சை

ஐபிஎல் 2023 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு மாதங்களாக தினம்தோறும் 10 அணிகளுக்குள் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இன்று சென்னை சேப்பாக்கத்தில் முதல் பிளே ஆஃப் போட்டி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஐபிஎல் வரலாற்றில் 4 முறை சாம்பியன் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!

சென்னை அணிக்கு சாதகம்

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2வது குவாலிஃபையரில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவதால், அந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனைத்து அஸ்திரங்களையும் உபயோகிக்க காத்திருக்கிறது. 

குருவிடம் தோற்காத சிஷ்யன்

சென்னை மற்றும் குஜராத் அணிகளைப் பொறுத்தவரை இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. இருப்பினும் இதுவரை மோதிக் கொண்ட 3 போட்டிகளிலும் குஜராத் அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கும் குஜராத்திடம் தோல்வி மட்டுமே சந்தித்திருக்கிறது. இதனால் அந்த வரலாற்றை மாற்றும் முனைப்பிலும் சிஎஸ்கே இருக்கிறது. அதேநேரத்தில் தோனியின் சிஷ்யனான ஹர்திக் பாண்டியா அவரிடம் கற்றுக் கொண்ட அஸ்திரங்களை எல்லாம் பக்கவாக பயன்படுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகிறார். இதனால், குரு மற்றும் சிஷ்யனுக்கு இடையே நடைபெறும் போட்டியாகவும் இதனை பார்க்கலாம். இதில் குரு வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா? அல்லது சிஷ்யன் மீண்டும் குருவை வெற்றி பெறுவாரா? என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ஆதிக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த மைதானத்தில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி இருக்கும் சிஎஸ்கே அணி 44 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் சந்தித்திருக்கிறது. முதல் பேட்டிங்கில் 27 முறையும், சேஸிங்கில் 17 முறையும் வென்றிருக்கிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஜியோ சினிமா செயலி மற்றும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை நேரலையில் கண்டு களிக்கலாம். 

மேலும் படிக்க | RCB Vs GT: நீயா நானா? ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்த குஜராத் அணி! போட்டியின் ஹைலைட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News