Lalit Modi Networth: பத்து ஆண்டுகளுக்கு முன்பு லலித் மோடி இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார். ஐபிஎல் தொடரை பெரிய வியாபார தளமாக மாற்றிய அவர், முறைகேடு புகார்கள் காரணமாக லண்டனுக்கு சென்றார். இதனால், இந்தியாவின் லைம் லைட்டில் இருந்து மறைந்திருந்த லலித் மோடி, முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னுடனான தன்னுடைய காதலை அறிவித்தவுடன் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். ஐபிஎல் மோசடியைக் கடந்து லலித் மோடியை பற்றி பலருக்கும் அவ்வளவாக தெரியாது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சேர்மேனாக இருந்தவர், இப்போது அந்த தொடர் அடைந்திருக்கும் உயரத்துக்கு ஏணியை அமைத்துக் கொடுத்தவர். உலகளவில் மிகவும் பிரபலான பணம் கொழிக்கும் விளையாட்டு லீக்காக ஐபிஎல் மாறியுள்ளதற்கும், அவரே முக்கிய காரணம். மிகப்பெரிய வணிக குடும்பத்தில் பிறந்தவர். 1963 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். 2008-10 வரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிறுவனர் மற்றும் முதல் தலைவராக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள விளையாட்டு வணிகத்தால் ஈர்க்கப்பட்ட லலித் மோடி, அதனை இந்திய கிரிக்கெட்டில் செயல்படுத்த முயன்றார். 1995 ஆம் ஆண்டே 50-ஓவர் உள்நாட்டு லீக் யோசனையை பிசிசிஐக்கு அவர் வழங்கினார். ஆனால், அந்த யோசனை அப்போது அதிக கவனத்தைப் பெறவில்லை. இருப்பினும், 2007-ல், தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, உள்நாட்டு ஐபிஎல் தொடருக்கு அடித்தளம் அமைத்தார்.
மேலும் படிக்க | Sushmita Sen Lalit Modi: 58 வயதில் காதலியை அறிமுகப்படுத்திய லலித்மோடி
“லலித் மோடியின் வளர்ச்சியும் வேகமும் எவ்வளவு இருந்ததோ, அதேஅளவு இந்திய கிரிக்கெட்டும் வளர்ச்சியையும் வேகத்தையும் பெற்றிருக்கிறது. 90களின் முற்பகுதியில் விளையாட்டு கட்டண சேனல்களை விநியோகிப்பதன் மூலம் ஒரு வணிகத்தை உருவாக்க முயற்சித்தபோது, இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை எதிரியாக பார்த்தது. தொலைக்காட்சி நுகர்வோர் பணம் செலுத்த தயாராக இருக்கும் சில விஷயங்களில் விளையாட்டும் ஒன்று என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், தான் எதிர்பார்க்கும் இலக்கை அடைய அந்த சிஸ்டத்தில் நுழைவது மட்டுமே வழி என்பதை உணர்ந்தார். பல வழிகளில் முயன்று 2005 ஆம் ஆண்டு பிசிசிஐயின் துணைத் தலைவராக மாறினார். இளம் வயதில் பிசிசிஐ துணைத் தலைவரானவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு" என ESPN தெரிவித்துள்ளது.
பிசிசிஐ-யின் உயர்மட்ட பொறுப்பில் இருந்தவர், வருவாயை ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலாக உயர்த்தினார். இருப்பினும், 2010-ல் அவர் மீது எழுந்த நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி ஏலங்கள் தொடர்பாக பிசிசிஐ, ல்லித் மோடியை தடை செய்தது. இது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் அவர் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது பண மோசடி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
58 வயதான இவர் அமெரிக்காவில் பொறியியல் மற்றும் வணிக நிர்வாகம் படித்துள்ளார். இந்திய அரசியலில் வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்த தொழிலதிபர்களில் மோடியும் ஒருவர். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். குறிப்பாக, ஒரு காலத்தில் பாஜக தலைவர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். மேலும், ராஜஸ்தானில் கணிசமான அரசியல் செல்வாக்குத் பெற்றிருந்தார். 2005-ல், அவர் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால், வசுந்தரா ராஜேவின் முதல் ஆட்சிக் காலத்தில் லலித் மோடியை எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் "சூப்பர் முதல்வர்" என்றுகூட அழைத்தனர்.
லண்டனில் வாழ்க்கை
பிசிசிஐயால் தடை செய்யப்பட்ட பின்னர், அமலாக்கத்துறை (ED) அவருக்கு எதிராக விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு, 2010-ல் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார். அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் லலித்மோடி, தான் ஒரு நிரபராதி என பலமுறை ஊடக பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லலித் மோடியின் வணிகம்
இந்திய கிரிக்கெட் உலகில் மோடி தனது பணி மற்றும் சர்ச்சைகளுக்காக அறியப்பட்டாலும், அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர். கிரிக்கெட்டுக்கு அவர் வரவில்லை என்றாலும் இன்னும் பல லட்சம் டாலர் மதிப்புள்ள வர்த்தக நிறுவனங்களை வைத்திருக்கிறார். மதுபானம், சிகரெட், பான் மசாலா, உணவகங்கள், சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பல வணிகங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.
மோடியின் சர்க்கரை ஆலைகள்
மோடியின் தாத்தா ராய் பகதூர் குஜர்மால் மோடி அவரது காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபர். 1933-ல் ஒரு சர்க்கரை ஆலையைத் தொடங்கினார். காலப்போக்கில், அவர் வணிகத்தை வளர்த்து, மோடி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். உத்தரபிரதேசத்தில் மீரட் அருகே மோடிநகர் என்ற தொழில் நகரத்தையும் அவர் நிறுவினார்.
பொழுதுபோக்கு நெட்வொர்க்கின் உரிமையாளர்
மோடி நெட்வொர்க் வணிகத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டது. 1993-ல், இந்தியாவில் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒளிபரப்ப அவர் வால்ட் டிஸ்னியுடன் கூட்டு சேர்ந்தார். மேலும் 1994 ஆம் ஆண்டு முதல் ESPN நிறுவனத்தின் பான் இந்தியா விநியோகஸ்தராகவும் மாறினார்.
மேலும் படிக்க | யார் இந்த சுஷ்மிதா சென்? லலித் மோடி உடனான டேட்டிங் புகைப்படங்கள்
ரூ.12,000 கோடி மதிப்பிலான குடும்ப வணிகம்
குஜர்மல் மோடியின் மறைவுக்குப் பிறகு, மோடி எண்டர்பிரைசஸை லலித் மோடியின் தந்தை கேகே மோடி நிர்வாகம் செய்தார். அவர் குடும்பத் தொழிலை விரிவுபடுத்தி பல்வேறு துறைகளில் இறங்கினார். இந்த வணிகம் இப்போது விவசாயம், இரசாயனங்கள், பான் மசாலா, மவுத் ஃப்ரெஷனர்கள், புகையிலை, தின்பண்டங்கள், சில்லறை விற்பனை, கல்வி, அழகுசாதனப் பொருட்கள், பொழுதுபோக்கு, ஃபேஷன், பயணம் மற்றும் உணவகங்கள் என சாம்ராஜ்ஜியமாக பரந்து விரிந்துள்ளது. ஆஜ் தக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மோடி எண்டர்பிரைசஸின் தற்போதைய மதிப்பு $1.5 பில்லியன் (சுமார் 12,000 கோடி) ஆகும்.
பிரபலமான பிராண்டுகளின் உரிமையாளர்
லலித் மோடியின் மோடி எண்டர்பிரைஸ் மோடி கேர், இண்டோஃபில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ராக்ஃபோர்ட் விஸ்கி, மார்ல்போரோ சிகரெட், பான் விலாஸ் பான் மசாலா, பீக்கான் டிராவல் நிறுவனம், 24x7 ரீடெய்ல் ஸ்டோர்ஸ் போன்ற பல்வேறு பிரபலமான பிராண்டுகளுக்குச் சொந்தமானது. டெல்லியில் மட்டும் ஈகோ தாய், ஈகோ இத்தாலியன், ஈகோ 33 உள்ளிட்ட உணவகங்களை நடத்தி வருகிறது. அரபு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த நிறுவனங்களுக்கு வணிக வர்த்தகம் உள்ளது.
நிகர மதிப்பு ரூ.4,555 கோடி
லலித் மோடி தற்போது லண்டனில் உள்ள ஸ்லோன் தெருவில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் வசிக்கிறார். 7000 சதுர அடியில் பரந்து விரிந்த ஐந்து மாடி வீடு. லிஃப்ட் வசதிகளுடன் கூடிய 14 அறைகள் உள்ளன. லலித்மோடியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,555 கோடி இருக்கலாம் என ஆஜ்தக் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR