ஸ்டர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடவேண்டும் - சரத்குமார்!

தூத்துக்குடி ஸ்டர்லைட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பொதுமக்களின் மீதான வழக்குகளை நீக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jun 3, 2018, 08:13 PM IST
ஸ்டர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடவேண்டும் - சரத்குமார்! title=

தூத்துக்குடி ஸ்டர்லைட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பொதுமக்களின் மீதான வழக்குகளை நீக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

"தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகளின் குடும்பத்தினரையும், போராட்டத்தில் கலந்து கொண்டு, துப்பாக்கிசூட்டிலும், தடியடியிலும் காயமடைந்த 100 க்கும் மேற்பட்டவர்களையும் கடந்த 31.05.2018 அன்று அவர் அவர் இல்லங்களிலும், பொது மருத்துவமனையிலும் சந்தித்து, அந்த சந்திப்பின்போது நான் நேரடியாக கேட்டறிந்த பல்வேறு செய்திகளை முதலமைச்சரிடம் இன்று எடுத்துரைத்தேன்.

அங்கு துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சராசரி மனிதர்கள். அவர்களிடம் எந்த ஒரு வன்முறையை தூண்டும் எண்ணம்இருந்ததற்கான அறிகுறி இல்லை. அவர்கள் தங்களது 100 வது நாள் அறவழி போராட்டத்திற்கு தங்களது குடும்பத்தினருடனும், குறிப்பாக தங்களது குழந்தைகளுடன், உணவு மற்றும் குடிநீர் எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி, தங்களதுகோரிக்கையை சமர்ப்பிக்கும் எண்ணத்துடன் பயணித்திருக்கின்றனர். 

கலவரத்தை தூண்டும் எண்ணம் உள்ளவர் எவரும், குழந்தைகளுடனும், அன்பான குடும்பத்தினருடனும் உணவு எடுத்துக்கொண்டு சென்றிருக்க மாட்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன். மேலும்முதலமைச்சரிடம், நான் சென்று வந்த பின்னர், என் மனதில் எழுந்த கேள்விகளை அவர் பார்வைக்கு எடுத்து சென்றேன்.

துயர சம்பவம் நடந்து நாட்கள் கடந்தும், தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு அறிவிப்பை வெளியிட்டபின்னரும் இன்று வரை பலரை இரவு நேரங்களில், கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதாக அறிகிறேன் என்றும் எடுத்துரைத்தேன். தொழில் புரிபவர்களும், மாணவர்களும், பணிக்கு செல்பவர்களும் காரணம் புரியாத பயத்துடன் நடமாடுவதைஉணர முடிந்தது. அவர்கள் எதிர்காலத்தை குறித்த ஐயம் அவர்களை வாட்டுவதை நான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு குடும்பத்திலும், மாவட்டத்தில் சகஜ நிலை வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிகிறேன்.

தொடர்ந்து மக்களின் மீது வழக்குகள் தொடரப்பட்டு நடவடிக்கை எடுப்பதும், இந்த வழக்குகள் அவர்கள் எதிர்காலத்தையும் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கும் என்ற ஐயம் பரவலாக நிலவுகிறது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்ப பெறப்பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு நிம்மதி வழங்க வேண்டும். இந்த பயம் கலந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு, எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறந்து மனஅழுத்தம் குறைந்து மக்கள் சகஜ நிலை திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் திறக்க வாய்ப்பளிக்காமல் இருக்கும் உத்திரவாதத்தை அனைவரும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்தேன்." என குறிப்பிட்டுள்ளார்

Trending News