பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 30-ம் தேதியிலிருந்து லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னிந்திய மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் இன்று 7-வது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டு வருகின்றனர்
தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் 7-வது நாளாக இன்றும் 30 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடவில்லை.
நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுடன் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால் 40 சதவீத இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தியது தொடர்பாக இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் ஹைதராபாத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 கோடி வீதம் 7 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தமிழகத்தின் உள்ளேயும், பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய மஞ்சள், ஜவ்வரிசி, இரும்பு தளவாட பொருட்கள், மரம், ஜவுளி உள்பட தினமும் 5 ஆயிரம் கோடி என 35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்கள் தேங்கி உள்ளது.
இது போல வட இந்தியாவில் இருந்து தமிழகம் வரும் பயிறு வகைகள், காய்கறிகள், வெங்காயம், பஞ்சு பேர்ல், எந்திர தளவாடங்கள், பருப்பு, கோழி தீவன மூலப்பொருட்கள் போன்றவை தடை பட்டுள்ளன.
எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன தலைவர் கூறியுள்ளார்.