தேசியக் கொடியை அவமரியாதை செய்த BJP-ஐ சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

காவி டிரெஸ் போட்டால் காவி களங்கம் என்கிறார்கள். தேசியக் கொடி களங்கமா? எனக் கேட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர் (SV Sekar) மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனத் தகவல்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 11, 2020, 04:39 PM IST
தேசியக் கொடியை அவமரியாதை செய்த BJP-ஐ சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு
Photo: Zee Media Network

சென்னை: தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர் (SV Sekar) மீது 124ஏ. 153பி ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனத் தகவல்.

தந்தை பெரியார் (Periyar), அறிஞர் அண்ணா (Anna), புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் (MGR) ஆகிய முக்கிய ஆளுமைமிக்க தலைவர்கள் சிலை மீது  காவிச்சாயம் பூசப்பட்ட சம்பவங்கள் குறித்து கண்டனமும் மற்றும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும், மும்மொழி கொள்கைக்கு இடம் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் தமிழக அரசையும், முக்கிய தலைவர்களை குறித்து அவதூறாக பேசி வரும் எஸ்.வி. சேகர் அவர்களையும் கண்டிக்கும் வகையில் பேசியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் (Edappadi K. Palaniswami) பேச்சு தமிழக பாஜக நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தநிலையில், தமிழக அரசை விமர்சிக்கும் விதமாக யூ-டியூப்பில் எஸ்.வி. சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

ALSO READ |  எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்க: மார்க்சிஸ்ட் அறிக்கை!

அதில் பேசிய எஸ்.வி.சேகர், "முதலமைச்சர் இருமொழி கொள்கை தொடரும் என்று கூறியுள்ளார். இந்த ஆட்சி தொடருமா என்றே தெரியவில்லை. தி.மு.க-வின் விஷயங்களை அ.தி.மு.க ஏன் தூக்கிச் சுமக்கிறது எனப் புரியவில்லை. தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி வைத்துக்கொண்டார்களா.

காவி டிரெஸ் போட்டால் காவி களங்கம் என்கிறார்கள். தேசியக் கொடி (Indian National Flag) களங்கமா? காவியைக் கட் பண்ணிவிட்டு, வெள்ளையும் பச்சையும் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இருந்தால்போதும், இந்துக்கள் (Hindu) வேண்டாம் என்கிற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? உங்கள் தலைமைச் செயலகம் எது அறிவாலயமா? அல்லது எந்த இடம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கள் தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமும் பலர் அவர் மீது புகாரளித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் (Chennai) அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் மீது சிலர் புகார் அளித்தனர். அந்த புகாரில் "தேசியக் கொடியை அவமரியாதை செய்ததுடன், தமிழக முதலமைச்சர் பற்றி அவதூறான கருத்தை எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேசிய கொடியை அவமதித்ததாகவும், அவர் மீது செக்‌ஷன் 124ஏ. 153பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

இதன் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.