சுகாதாரத்துறையிலும் ‘வடிவேல்’ - வொர்க் அவுட் ஆன விழிப்புணர்வு பிரச்சாரம்!

Actor vadivel : எங்கும் வடிவேல் ; எதிலும் வடிவேல் தானே. காமெடி முதல் நமது அன்றாட அரட்டைகளில் ஏதேனும் ஒரு சின்ன நக்கல் வரிகள் வரை இடம்பெற்றிருந்த வடிவேல், தற்போது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு கூட பயன்படும் வரை வடிவேலுவின் சொற்கள் வீரியம் அடைந்திருக்கின்றன!.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Aug 11, 2022, 07:16 PM IST
  • குப்பை விழிப்புணர்வுக்காக ஊராட்சி நிர்வாகத்திற்கு வந்த ஐடியா!
  • குப்பைகளைக் கொட்டாமல் இருக்க வடிவேல் பேனர் வைத்து அசத்தல்
  • வடிவேலுவின் பேச்சைக் கேட்டு குப்பைக் கொட்டாமல் செல்லும் மக்கள்
சுகாதாரத்துறையிலும் ‘வடிவேல்’ - வொர்க் அவுட் ஆன விழிப்புணர்வு பிரச்சாரம்!  title=

சுற்றுப்புறத்தையும், பொதுவெளி இடத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முட்டுச்சுவர்களிலும், டிரான்ஸ்ஃபார்மர் ஒட்டியுள்ள சுவரிலும், பொதுவெளிச்சுவரிலும் ‘சிறுநீர் கழிக்காதே’, ‘குப்பையைக் கொட்டாதே’ என்று எழுதி வைப்பார்கள். ஆனாலும் பலர் சுவரில் உள்ள வாசகத்தையே சிறுநீரால் அழிக்கும் அளவுக்கு துர்நாற்றச் செயலில் ஈடுபடுவதுண்டு. பல சுவர்களில் இந்த முயற்சி தோல்வியை எட்டிய நிலையில், மூன்று மதங்களின் கடவுள் உருவகங்களை வரைந்து பொதுவெளியில் சிறுநீர் கழிப்போரின் மனசாட்சியைத் தூண்டிப்பார்த்தது சுகாதாரத்துறை நிர்வாகம். 

மேலும் படிக்க | நகர்மன்றக் கூட்டத்தில் விவாதமாகும் ‘குப்பைக்’ கதைகள்.!

ஆனாலும், பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை. ‘இங்கு குப்பையைக் கொட்டாதீர்கள்’ என்ற வாசகத்தின் கீழேதான் அத்தனைக் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. ‘இங்கு குப்பையைக் கொட்டவும்’ என்ற வாசகத்தை தாங்கி நிற்கும் குப்பை சேகரிப்புத் தொட்டியில் குப்பைகள் இல்லாமல், அதனைச் சுற்றியே அதிக குப்பைகள் இருப்பதே இங்கு யதார்த்தம். ஒருகட்டத்தில், ‘இங்கு குப்பைக் கொட்டினால் தண்டிக்கப்படுவீர்கள்’ என்று மிரட்டலை நோக்கிச் செல்லும் வாசகங்கள் வரை இடம்பெற்றன. ஆனாலும், மாற்றம் நிகழ்ந்தபாடில்லை. 

பொதுவெளியில் குப்பைகளைக் கொட்டாமல் பொதுமக்களைத் தடுப்பதற்காக விதவிதமான முறைகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சியில் புதிய வழியை கையாண்டிருக்கிறார்கள். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதுதான் ஆச்சரியம். அதற்கு கைக்கொடுத்திருப்பது வேறு யாருமில்லை ; நம்ம வடிவேலுதான்!.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கணியூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் வீசும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம் பிரித்து ஊராட்சி நிர்வாகம் மறு சுழற்சி செய்து வருகிறது. இந்நிலையில் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். 

வழக்கம் போல பல பிரச்சார உத்திகளை ஊராட்சி நிர்வாகம் முயன்றுபார்த்துவிட்டது. ஆனாலும், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்ததால் அந்தப் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நினைத்த கணியூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது.

வடிவேலு நடித்த 'வின்னர்' பட போட்டோவுடன், அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது. அதில், 'இந்த இடத்துக்கு நீயும் குப்பை கொட்ட வரக்கூடாது; நானும் வரமாட்டேன்' என்ற டயலாக்கையும் எழுதி வைத்துள்ளது. இது, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | ‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ - சென்னை மக்களுக்கு மேயர் பிரியா ‘அட்வைஸ்’

இந்த விழிப்புணர்வு பேனரைக் கண்டதும் சிரித்தபடியே பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதைத் தவிர்க்கின்றனர். அதற்குப் பதிலாக, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளைச் சேகரித்து செல்கின்றனர். சுகாதாரத்துறையின் விழிப்புணர்வுக்கு வடிவேலுவின் டயலாக் கைக்கொடுத்திருக்கிறது. ‘எனக்கு End card-ஏ இல்லடான்னு’ வடிவேல் சொன்ன பிரபலமான டயலாக்தான் ஞாபகத்திற்கு வருகிறது!. 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News