விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?

Vikravandi By-Election News: விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jun 18, 2024, 11:34 AM IST
  • ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
  • பிப். 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கினார்.
  • விரைவில் அக்கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா? title=

Vikravandi By-Election News: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்.6ஆம் தேதி காலமானார். மக்களவை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்ததால் அப்போது இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஏப். 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றபோது, கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது.

தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. அந்த வகையில், விக்கிரவாண்டி தொகுதியில் (Vikravandi Assembly Constituency) இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று நடைபெற்றது.

முன்னதாக இந்த தொகுதி 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளாரிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ராதாமணி, 2016இல் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரும் 2019ஆம் ஆண்டிலேயே காலமாக, அப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிட்டனர். ஆனால் அதில் புகழேந்தி தோல்வியடைந்தார். 

இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு, அதிமுகவின் முத்தமிழ் செல்வனை வீழ்த்தினார். ஆனால், ராதாமணியை போன்று புகழேந்தியும் மூன்று வருடங்களிலேயே காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பாஜக கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என வானதி சீனிவாசன் நம்பிக்கை

திமுக, பாமக போட்டி... 

அந்த வகையில், திமுக மற்றும் பாஜக கூட்டணியில் பாமக ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா மற்றும் பாமக சார்பில் சி. அன்புமணி ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து நடிகர் விஜய்யின் (Actor Vijay) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் (Bussy Anand) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

'2026 தான் பிரதான இலக்கு'

விஜய் விரைவில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கட்சியின் உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vetri Kazhagam) போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | சீரூடையில் இருந்த பெண் காவலர்... சராமாரியாக அரிவாளால் வெட்டிய கணவர் - கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News