2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தில் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் புதிய தமிழகம் கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டணியுடன் விரைவில் தேமுதிக இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேச்சுவாரத்தை நடத்தினார். பின்னர் பேச்சுவாரத்தையில் உடன்பாடு ஏற்ப்பட புதிய நிதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது என கையெழுத்தானது. மேலும் இரட்டை இலை சின்னத்தில் புதிய நிதி கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தாய்வீட்டிற்க்கு மீண்டும் வந்திருக்கிறேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு பெருமையே. வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு அளிக்கும் எனக் கூறினார்.