பிராமணர் அல்லாத இந்துக்களின் உணவகங்களில் சாப்பிட்டால் நோய் வருமா? பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு

பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருந்தவரை இவ்வளவு மருத்துவமனைகளுக்கு அவசியமே இல்லை என பாஜக மாநில நிர்வாகி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 22, 2023, 09:15 AM IST
  • பாஜக மாநில நிர்வாகியின் சர்ச்சை பதிவு
  • பிராமணர் அல்லாதோரின் உணவகங்களில் சாப்பிடக்கூடாதா?
  • கருத்தரிப்பு மையங்கள் வருவதற்கு உணவகங்கள் காரணமா?
பிராமணர் அல்லாத இந்துக்களின் உணவகங்களில் சாப்பிட்டால் நோய் வருமா? பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு title=

சைவ உணவகங்கள் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்ற புரட்சியை செய்தவர் பெரியார் என அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா, சித்ரா லட்சுமணன் அவர்களின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்தார். அதில், ஸ்ரீனிவாச ராஜா எந்த சாதியையும் குறிப்பிட்டு பேசவில்லை.  நெறியாளராக இருந்த சித்ரா லட்சுமணன், ’ ஒரு காலகட்டத்தில் பார்த்தீங்கனா ஹோட்டல்கள் எல்லாம், குறிப்பாக சைவ உணவகங்கள் பெரும்பாலும் ஐயர்கள் வசம் தான் இருந்தது. அதுக்கப்பறம் தான் மெல்ல மெல்ல மாருது. அதெப்படி அந்த மாற்றம் வந்தது?’ என கேட்கிறார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் KT சீனிவாச ராஜன், " அதற்கு காரணம் பெரியார் தான். குலத்தொழிலை மாற்றியவர். யார் வேண்டுமானாலும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற புரட்சி செய்தார். அரசுகளும் ஆதரவாக இருந்ததால் குறிப்பிட்ட சமுதாய மக்கள் தான் பண்ணிட்டு இருந்த தொழிலை யார் வேண்டுமானாலும் பண்ணலாம்... கடல்ல யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்ற மாற்றங்கள் வந்ததால் இது சாத்தியமாச்சு" என கூறுகிறார்.

மேலும் படிக்க | “பெரியார் தான் காரணம்” சர்ச்சையில் சிக்கிய அடையார் ஆனந்த பவன்! என்ன நடந்தது?

இதற்கு இந்துத்துவ கும்பல் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜன் இந்துக்களுக்கு எதிராக பேசிவிட்டதாகவும்,  அதனால் அடையாறு ஆனந்தபவனை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வன்ம பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு பாஜகவின் மாநில ஐடி விங் செயலாளர் மோதிலால் என்பவர், " பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருந்தவரை, இவ்வளவு மருத்துவமனைகளுக்கு அவசியமே இல்லாமல் இருந்தது. தற்போது எவ்வளவு ஹோட்டல்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு மருத்துவமனைகளும் உருவாகியுள்ளன!... குறிப்பாக, புற்றீசல் போல  கருத்தரிப்பு மையங்கள்!" என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் Boycott A2B என்ற ஹேஸ்டேக்கையும் போட்டுள்ளார். இங்கு தான் அவரின் வன்மம் வெளிப்படுகிறது. அதாவது அடையாறு ஆனந்தபவன் உரிமையாளரின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக தான் இந்த பதிவை அவர் போட்டுள்ளார். 

பிராமணர்களுக்கு எதிராகவோ அல்லது இந்துகளுக்கு எதிராகவோ எந்தவொரு வார்த்தையும் ஆனந்த பவன் உரிமையாளர் KT சீனிவாச ராஜன் பயன்படுத்தவில்லை. மாறாக எல்லோரும் எல்லா தொழிலையும் செய்யலாம் என்ற கருத்தை தான் கூறினார்.

அதற்கு பெரியார் வழிவகை செய்தார் என்றும் அடிகோட்டிட்டு அவர் சொல்லியிருக்கிறார். இது எப்படி இந்துக்களுக்கு எதிராகவும், பிராமணர்களுக்கு எதிரானதாகவும் அமையும். இத்தனைக்கும் சீனிவாச ராஜன் அவர்கள் குங்குமமும், திருநீறுடன் தான் அந்த பேட்டியில் இருக்கிறார். அவருக்கு கடவுள் பக்தி இருப்பதை அவருடைய பேட்டியை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 

அப்படி இருக்கையில் பாஜக மாநில நிர்வாகி மோதிலால் என்பவர் பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருக்கும் வரை இவ்வளவு மருத்துவமனைகள் இல்லை என்று சொல்வது, குறிப்பிட்ட சாதியினர் இல்லாமல் பிற இந்துக்கள் ஹோட்டல் ஆரம்பித்ததால் நாட்டில் நோய் அதிகரித்துவிட்டது என சொல்வது போல் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்துக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு சக இந்துகளையே கொச்சைப்படுத்தும் வகையில் அவருக்கு ஆதரவாக இருக்கும் சக இந்துத்துவவாதிகள் எழுதியிருக்கும் எக்ஸ் பதிவுகளையும் நெட்டிசன்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும், பாஜக மாநில நிர்வாகி மோதிலாலின் பதிவு பிராமணர் vs இந்துக்கள் என்ற பிரிவினையை உண்டாக்கும் வகையில் இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் படிக்க | மாணவர்களின் ஆடையை கிழிக்கும் மாடலாக உள்ளது ஒன்றிய அரசு-அமைச்சர் அன்பில் மகேஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News