‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டத்தால் தமிழகத்தில் பொது விநியோகத்திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "நாடு முழுவதும் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொது விநியோகத் திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மக்கள், மொழி, கலாச்சாரம், பண்பாடு, உணவு என எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், எல்லாமே ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நடைமுறைக்குச் சாத்தியப்படாத திட்டத்துடன் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக "ஒரே நாடு; ஒரே ரேசன்" திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. 2020 ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தில் சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உணவுப்பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதினால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் விலையில்லா அரிசி திட்டம் ரத்தாகலாம் என்ற நிலைமை இருக்கிறது. மேலும் நடுத்தர வர்க்கத்தினர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் எந்தப் பலனும் பெற முடியாத சூழலும் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் 'ஒரே நாடு; ஒரே ரேசன்' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால், பொது விநியோகத் திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும். ஏழை, எளிய மக்கள் பெற்று வரும் விலையில்லா அரிசி உள்ளிட்டவை கேள்விக்குறியாகி விடும்.
வெளிமாநிலங்களில் இருந்து இங்கே குவிந்திருக்கும் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களில் கணிசமான பகுதியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். தமிழக அரசுக்கும் கூடுதல் நிதிச்சுமை உருவாகும். எனவே ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்தினை பழனிச்சாமி அரசு நிராகரிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யில் உரிய பங்கு கிடைக்காத நிலை, உதய் மின் திட்டத்தால் ஏற்படும் நிதிச் சுமை, பேரிடர் நிதிகளைச் சரியாக வழங்காமல் இழுத்தடிப்பு என மத்திய அரசின் புறக்கணிப்புகளைத் தட்டிக்கேட்டு நிதியைப் பெற முடியாத பழனிச்சாமி அரசு இதிலும் அப்படி நடந்து கொண்டால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அன்றாடம் உழைத்துச் சாப்பிடுகிற மக்களுக்கு ரேசன் பொருட்கள்தான் வாழ்வாதாரம் என்பதை மறந்துவிடாமல், உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் உணவுக்கு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.