அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளை சென்னை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டது. அதன்படி பத்திர பதிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. வீட்டு வசதி வாரிய துறை சார்பில் இரண்டு அரசாணையை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகளும் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது.
விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண் இயக்குனரின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீட்டுமனையாக மாற்றக்கூடாது. கோயில் நிலங்கள், வக்ஃபு வாரிய நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது. உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை என்பன உள்ளிட்ட பல புதிய விதிகளை தமிழக அரசு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி அரசின் புதிய சட்டவிதிகளின் படி பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2016 அக்டோபர் 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுவிற்பனை செய்யலாம் எனவும், நீதிமன்றம் தடைவிதித்திருந்த காலத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அனுமதிக்கப்படும் பத்திரப்பதிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை. மேலும் இதுதொடர்பான வழக்கு ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.