அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிப்பு எப்போது?

Tamil Nadu Latest Updates: அமைச்சர் பொன்முடியை சொத்துகுவிப்பு வழக்கில் விடுவித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2023, 12:53 PM IST
  • இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு விழுப்புரத்தில் பதிவாகியுள்ளது.
  • 2016ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பு.
  • இந்த தீர்ப்பை தற்போது ரத்த செய்து நீதிபதி உத்தரவு
அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிப்பு எப்போது? title=

Tamil Nadu Latest Updates: சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை (Minister Ponmudi) விடுவித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிபதி ஜி. ஜெயசந்திரன் ரத்து செய்து உத்தரவிட்டார். அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் வரும் டிச. 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) தெரிவித்துள்ளது. 

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி வரும் டிச. 21ஆம் தேதி நேரிலோ அல்லது காணொளி மூலமே ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 

லஞ்ச ஒழிப்பு துறையின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. 64.90 சதவீத வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக டிசம்பர் 21ஆம் தேதி ஆஜராகும்படி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

மேலும் படிக்க | மதுரை உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வழக்கின் வரலாறு

இதன் காரணமாக, எம்.எல்.ஏ.வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கிறார். கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்

இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களைத் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. 

பொன்முடி தரப்பில், "மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தனியாக  வர்த்தகம் செய்துள்ளார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை" என வாதிட்டார். 

'நீரூபணமாகி உள்ளது'

குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில்,"குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரிக்கணக்கு அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறு. 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகி உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் விடுதலை செய்துள்ளதாகக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக டிசம்பர் 21ஆம் தேதி ஆஜராகும்படி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பின் காரணமாக பொன்முடி, எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார்.

இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடி, மொத்த தீர்ப்பையும் நிறுத்தி வைத்தால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது.

மேலும் படிக்க | ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள்... இரவில் உணவு விநியோகம் - மீட்பு எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News