பாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!
#MeToo என்னும் ஹாஸ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து உலகெங்கிலும் உள்ள பெண்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் திரையுலகினை கதிகலங்க வைத்த இந்த வழக்கம், தற்போது தமிழகத்தையும் எட்டியுள்ளது.
தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறியிருந்தார்.
வைரமுத்துவிடம் இருந்து தப்பிக்க தனது காலணிகளை கூட எடுக்காமல் வீட்டிற்கு ஓடியதாகவும் சின்மயி அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது வைரமுத்து தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு தனியாக செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சின்மயி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் பாடகி சின்மயிக்கு ஆதரவாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், H ராஜா தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
Me too தொடர்பாக எம்.ஜே.அக்பர் பற்றி கால் பக்க கட்டுரை எழுதிய இமாம் அலிக்கு முழுபக்க விளம்பரம் தந்த பத்திரிகை சின்மயி புகார் பற்றி மௌனம் ஏன்.
— H Raja (@HRajaBJP) October 10, 2018
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.பாதிக்கபட்டவர்களுக்கும்,பரிதவித்து நிற்பவர்களுக்கும்,தர்ம நியாயத்திற்கும் ஆதரவாக என் குரல் எப்போதும் இருக்கும். தனி மனித ஒழுங்கீனங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் உரிய விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டால் தண்டிக்கப்படவேண்டும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 11, 2018