மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது: எச்.ராஜா ட்வீட்

தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக விற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும் சிவசேனா கட்சிக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2019, 12:16 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது: எச்.ராஜா ட்வீட் title=

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸுடன் சேர்ந்து சிவசேனா அரசாங்கத்தை அமைக்கும், அந்த கூட்டணி கட்சியின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார் என அறிவிப்பு வெளியான நிலையில், இன்று காலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென என்.சி.பி. கட்சியை சேர்ந்த அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜக கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைதுள்ளது. முதல் வேலையாக மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பாஜக-வை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) மற்றும் துணை முதல்வராக என்.சி.பி. கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி விதி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் அரங்கேறி வரும் நிகழ்வுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல பாஜக தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள், "மகாராஷ்டிராவில் நாங்கள் பெரியவர்கள் என வாதிட்ட சிவசேனா கட்சிக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக விற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும் உடனடியாக தேர்தல் வருவதையும் தவிர்க்க வேண்டும். தனது கடமையை சரியாக நிறைவேற்றி முதல்வர் பொறுப்பேற்றுள்ள ஃபட்னவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்"

மற்றொரு ட்விட்டில், மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது என பகிர்ந்துள்ளார்.

 

 

கடந்த மாதம் 21 ஆம் தேதி மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. சட்டசபை தேர்தலில் நண்பர்களான பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. மற்ற இடங்களில் சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்களின் பெரும்பான்மை தேவை என்ற நிலையில், BJP -Shiv Sena Alliance 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு (Shiv Sena) -  தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) - காங்கிரஸ் (Congress) ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டு தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். அப்படி பார்த்தால், மாநிலத்தில் சிவசேனா, என்.சி.பி, ஒரு சில சுயேச்சை எம்.எல்.ஏக்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெளிப்புற ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான 145 சட்டமன்ற தொகுதிகளின் பெரும்பான்மையை எளிதில் கிடைக்கும். சிவசேனாவில் 56 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 54 உறுப்பினர்களைக் கொண்ட என்.சி.பி மற்றும் 44-எம்.எல்.ஏ கொண்ட காங்கிரஸையும் சேர்த்து, 7 சுயேச்சைகளின் ஆதரவும் கிடைப்பதால், இந்த கூட்டணியில் மொத்தம் 161 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.

மறுபுறம், பாஜக 105 எம்.எல்.ஏக்கள், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) 2, பகுஜன் விகாஸ் ஆகாதி 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1, சுயேச்சைகள் 6, ஜன சுராஜ்ய சக்தி 1, கிரந்திகாரி ஷெட்கரி கட்சி 1, மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா 1, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி 1, பிரஹர் ஜனசக்தி கட்சி 2, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா 1, சமாஜ்வாடி கட்சி 2 மற்றும் ஸ்வாபிமான் பக்ஷா 1 என மொத்தம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 117 ஆக இருக்கும். இதனால் பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

அதேவேலையில் மகாராஷ்டிராவில் சட்டசபை காலம் முடிந்ததால், யாரும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வராததால், கடந்த 12 ஆம் தேதி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது.

Trending News