2019 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் -தமிழிசை

ம.பி, ராஜஸ்தானில் வாக்கு சதவீத வித்தியாசம் மிக குறைவு தான்; அதனால் இதனை தோல்வியாக நாங்கள் கருதவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 11:45 AM IST
2019 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் -தமிழிசை title=

ம.பி, ராஜஸ்தானில் வாக்கு சதவீத வித்தியாசம் மிக குறைவு தான்; அதனால் இதனை தோல்வியாக நாங்கள் கருதவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்! 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில், தெலங்கானா மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்துள்ளது.  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், சறுக்கலைச் சரிசெய்து 2019நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்ட தமிழிசை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, வெற்றிகரமான தோல்வி எனத் தான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் குறையவில்லை என்கிற பொருளில் தான் பேசியதாகத் தெரிவித்தார். சறுக்கலைச் சரிசெய்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். 

 

Trending News