பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 3வது நாளாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது குறித்து,தமிழக அரசு கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் டீசல், உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தால் தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் தொடர் போராட்டத்தால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டங்களால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது
இதை தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டி வருகின்றனர்.
கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பெரம்பலூர் செட்டுக்குளம் பகுதியில் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் போரட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
அரசு பேருந்து கட்டணம் இரட்டிப்பாகியுள்ளதால் அன்றாடம் கல்லூரி வந்து செல்வதே கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். படிப்பதற்காக கல்லூரிக்கு வருவதா அல்லது பேருந்துக்கு கட்டணம் செலுத்துவதற்காக வேலைக்கு செல்வதா என்று மாணவர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.