திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு முறை மாற்றம் குறித்து விசாரணை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கு 54 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, புதிய முறையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்திருப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட வேண்டும்; அதற்குள் 69% இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் மரபாகும். ஆனால், இப்போது துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு, 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, ஒவ்வொரு துறையிலும் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பணி நியமன வாய்ப்பு கிடைக்கும். இது தான் சமூகநீதியை தழைக்கச் செய்யும். மாறாக, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓர் அலகாக கருதி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு துறையில் முழுக்க முழுக்க ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவினரும், இன்னொரு துறையில் முழுக்க முழுக்க பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதியினரும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் சமூக நீதி சீரழிக்கப்படும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு துறையிலும் எந்த சமூகப்பிரிவு ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அந்த பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுவதற்கும், மற்றவர்கள் பழிவாங்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இது பல்கலைக்கழகக் கல்வி சூழலையே மாற்றி விடும்.
இதற்கெல்லாம் மேலாக, இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த துறை அலகை மாற்றிவிட்டு பல்கலைக்கழக அலகை அறிமுகப்படுத்தும்போது, 200% ரோஸ்டர் சுழற்சி முழுமையாக முடிவடைந்திருக்காத பட்சத்தில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக ‘துறை அலகு’ முறையில், கடந்த நியமனத்தின் போது ஒரு துறையின் பேராசிரியர் பணி பொதுப்பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தால், அதற்கு அடுத்த 3 நியமனங்கள் முறையே பட்டியலினம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ‘துறை அலகு’ பல்கலைக்கழக அலகாக மாற்றப்படும் போது, ஏற்கனவே பணி நியமனம் பெற்ற பொதுப்பிரிவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இது மிக மோசமான சமூகநீதியாகும்.
இவை ஒருபுறமிருக்க ‘துறை அலகு’ முறையிலிருந்து ‘பல்கலைக்கழக அலகு’ முறைக்கு மாறுவதற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தவர் யார்? என்பது தான் உடனடியாக விடை காணப்பட வேண்டிய வினா ஆகும். தமிழக பல்கலைக்கழகங்களில் காலங்காலமாக ‘துறை அலகு’ முறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காத மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் வட இந்திய பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அலகு முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘துறை அலகு’ முறை தான் சிறந்தது என்பதால் மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் அம்முறையையே நடைமுறைப் படுத்த 2017-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. ஆனால், அதை ஏற்காத மத்திய அரசு, சட்டத்திருத்தத்தின் மூலம் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அலகு முறையையே மீண்டும் கொண்டுவந்தது.
ஆனால், அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்போ, மத்திய அரசின் சட்டத் திருத்தமோ தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. எனவே, தமிழகத்தில் ‘பல்கலைக்கழக அலகு’ முறையை செயல்படுத்தத் தேவையில்லை. அநீதியான அந்த முறையை செயல்படுத்துவதாக இருந்தாலும் தமிழக அரசு முறைப்படி கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகள் எதையும் கடைபிடிக்காமல், ஆட்சிக் குழுவில் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி ‘பல்கலைக்கழக அலகு’ முறையை செயல்படுத்த பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அரசாங்கத்தை மதிக்காமல், அரசு கொள்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, சமூக அநீதி திணிக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலைக்கழக அலகு’ இடஒதுக்கீட்டு முறை தடுக்கப்படாவிட்டால், மற்ற பல்கலைக்கழகங்களும் அதையே கடைபிடிக்கத் தொடங்கிவிடும். அது சமூகநீதியை குழிதோண்டி புதைத்து விடும். எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, ‘துறை அலகு’ இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிவிக்கையை வெளியிடும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.