சென்னை: பண்பாடு இன்றி வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பயன்படுத்தி வரும் பாஜக பிரமுகர் எச்.ராஜாவுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எச்.ராஜாவின் இத்தகைய அநாகரிக போக்கை கட்சித் தலைமை கண்டிக்குமா எனவும் கேள்வி எழுப்பட்டு வருகிறது.
இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்பது எல்.கே.அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற பல மூத்த தலைவர்களின் முயற்சியால் படிப்படியாக வளர்க்கப்பட்டு, தற்போது நாட்டின் மிகப்பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது. அதேபோல கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒருவர் பொதுவெளியில் அநாகரிகமாக பேசுவது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இதுபோன்ற செயல்கள் கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்.
மேலும் ஒருவருக்கு அரசு மீதோ, ஒரு அமைப்பு மீதோ அல்லது தனிநபர் மீதோ விமர்சனம் இருந்தால், அதை சொல்லும் விதத்தில் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக உணர்சிவசப்பட்டு வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பயன்படுத்துவது அநாகரிகமாகும். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பலமுறை அநாகரிகமாக மற்றவர்களை, குறிப்பாக பத்திரிகையாளர்களை தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.
பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பொது வெளியில் பேசும் கருத்துகள் தொடர்ந்து அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் இருந்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவர்கள் முன்னிலையிலேயே பொதுவெளியில் Presstitutes என்று விமர்சிக்கிறார். அதாவது ஊடகப்பணி செய்பவர்களை பாலியல் தொழில் செய்பவர்களோடு ஒப்பிட்டு பேசுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் பொதுவெளியில் போலீஸார் முன்னிலையில் உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசினார். அதையெல்லாம் மதிக்க முடியாது என்னும் வகையில் இருந்தது அவரது பேச்சு. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு கண்டனம் தெரிவித்த பின், மன்னிப்பு கோரினார்.
இதேபோல 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றியும் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் மகள் கனிமொழி பற்றியும் அநாகரிக டிவீட் செய்திருந்தார் ஹெச்.ராஜா. பின்னர் திமுக-வினரின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அதனை நீக்கினார்.
கட்சியின் ஒரு கடைமட்ட உறுப்பினரோ, அல்லது மூன்றாம் தர நபரோ இப்படி அநாகரிகமாக பேசுவது சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இப்படி பேசிவருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னிஅரசு, ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
ஹெச்.ராஜாவின் இத்தகைய அநாகரிக போக்கை கட்சித் தலைமை தலையிட்டு கண்டிக்க வேண்டும் என்ற குரலும் ஒலித்து வருகிறது. என்ன செய்யப் போகிறார் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR