முதல்வரின், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி!

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!

Last Updated : Jun 11, 2018, 09:01 PM IST
முதல்வரின், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி! title=

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

"குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் நாள் "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது.

குதூகலமாய் துள்ளித் திரிந்து, பள்ளி சென்று கல்வி பயின்று, அளவில்லா இன்பத்தை அள்ளிப் பருக வேண்டிய பள்ளிப் பருவத்தில், குழந்தைகளை பணிக்கு அனுப்புவது மிகக் கொடிய செயல் ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகளே! எனவே, அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையை உருவாக்கிட, குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிப்பதோடு, அவர்களின் நலனைப் பேணுவதும் நமது தலையாய கடமையாகும். 

குழந்தைத் தொழிலாளர் முறையினை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றிடும் உயரிய நோக்கில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களை சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் ஆகியவற்றை வழங்குதல், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500/- மாதாந்திர உதவித்  தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ""குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை"" என்பதை உணர்ந்து, அனைத்து பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு அழிவில்லாத கல்விச் செல்வம் கிடைக்கச் செய்ய வேண்டும். 

"தொழிலாளர்களாக இல்லாமல், குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்" என்ற உறுதியினையும், ""குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம்"" என்ற உறுதியினையும், அனைவரும் ஏற்று, குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News