16 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டம், சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்கள், மானிய கோரிக்கையின்போது அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசு பங்களிப்புடன் கூடிய திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் இத்திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்பாட்டில் உள்ளது? ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன தேவைகள் உள்ளது? என்பதை அறியவும், இன்று தலைமை செயலகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய 16 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
இவர்களுடன் துணை முதல்வர ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பின்னர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துக்களை எடுத்துரைத்து பேசினார்கள்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மக்களை சென்றடையும் வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.