சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாநகர மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Last Updated : Jun 11, 2020, 02:00 PM IST
சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி title=

சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 5 ரோட்டை மையமாக கொண்டு புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலும், குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையிலும் ரூ.441 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த மேம்பாலம் கட்டுவதற்கு முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 14.1.2016 அன்று அடிக்கல் நாட்டினார். இந்த மேம்பாலத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குரங்குச்சாவடி முதல் புதிய பஸ் நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையில் 5 கிலோ மீட்டர் தூரம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன. இந்த மேம்பாலமானது 4 வழிப்பாலமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில், குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. குரங்குச்சாவடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர், சேலம் லீபஜார் முதல் செவ்வாய்பேட்டை இடையே ரூ.46.35 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் திறந்து வைத்தார். 

இந்த உயர்மட்ட பாலங்கள் திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Trending News