டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக ரூ. 54.65 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழகத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளம் பெரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
*கடந்த நான்காண்டுகளாக டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்காக வழங்கிய 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.
*டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நெல் நடவுப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளவும், பயிர்களை பராமரித்து, குறைந்த நீரில் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி முறையினை பின்பற்றி மகசூலை உயர்த்தும் வகையில் நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணியை மேற்கொள்ள டெல்டா விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் நடவு இயந்திரங்கள் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் என ஒரு ஏக்கருக்கு ரூபாய் 4,000 மானியத் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
*டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி குறுவை சாகுபடி அளவை அதிகரிக்கும் நோக்கில், 90 மில்லிமீட்டர் விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளம் கொண்ட குழாய்கள், 30 எண்கள் கொண்ட ஆயிரம் அலகுகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
*காவேரி டெல்டா பகுதியில், குறுவை சாகுபடியில் மகசூலை உயர்த்த நுண்ணூட்ட சத்து குறைபாடு உள்ள 50,000 ஏக்கருக்கு மானிய விலையில் நெல் நுண்ணூட்டக் கலவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக 170 ரூபாய் வழங்கப்படும். நிலத்தின் மீது கலவை ஏற்படுத்த ஒரு லட்சம் ஏக்கருக்கு துத்தநாக சல்பேட்டு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு 400 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
*குழாய் கிணறுகள் போதுமான அளவு இல்லாததால் காவிரி துணை ஆறு மற்றும் கல்லணை வாய்க்கால் பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடியை பல ஆண்டுகளாக மேற்கொள்வதில்லை. இப்பகுதி விவசாயிகள் தென்மேற்கு பருவமழையைப் பயன்படுத்தி, உழவுப் பணி மேற்கொள்ளவும், குறைந்த கால பயறு சாகுபடியை 15,000 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள விதைக்கான மானியம் 100 சதவீதம் வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு 1,400 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதற்கென 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
*காவேரி டெல்டா கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியில், நிலத்தடி நீர் உவர் நீராக உள்ளதால் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள இயலாது. எனவே இப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மண்வள மேம்பாட்டிற்காக, மண்ணின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி உழவு மேற்கொண்டு, பசுந்தாள் உரப்பயிரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இதற்கு தேவையான விதைகள் 100 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மண் வளம் மேம்படுவதோடு, வெண்ணாறு கடைமடைப் பகுதியில் சம்பா நெல் உற்பத்தியும் உயரும்.
ரூ. 54 கோடியே 65 லட்சம் செலவில் இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.