சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலின் மூலவர் லிங்கத்தை திருடியதாக நித்யானந்தா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. 1924-ஆம் ஆண்டு மேட்டூர் ஆணை கட்ட முடிவு செய்யப்பட்டபோது, அணை கட்டினால் கோவில் மூழ்கிவிடும் என கூறி பதால் பாலாவாடியில் மற்றொரு கோவிலை கட்டினர். பின்னர் பண்ணவாடு கோவிலில் இருந்த மூலவர் லிங்கம், சிலைகள் புது கோவிலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், பெங்களூரில் நித்யானந்தா சொற்பொழிவாற்றிய போது, முந்தைய ஜென்மத்தில் அவர் தான் ஜலகண்டேஸ்வரர் கோவிலை கட்டியதாக தெரிவித்தார். மேலும் அங்கு இருந்த மூலவர் லிங்க சிலை தற்போது தன்னிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா கூறியது சமூக ஊடங்ககளில் பரவியதை தொடர்ந்து, பாலவாடி பகுதியை சேர்ந்த மக்கள் கொளத்தூர் காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது புகார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து லிங்கத்தை மீட்டுத்தரவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து காவலர்கள் அவர் தற்போது கோவிலில் உள்ள சிலை உண்மையான சிலைதானா என்றும், நித்யானந்தா கூறியவாறு அவரிடம் சிலை உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.
நித்யானந்தா இது போன்ற சர்ச்சைகளை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் கூட தான் சூரிய உதயத்தைக் கட்டுப்படுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.