சேலம் - சென்னை பசுமை சாலை திட்டத்தை எச்சரிக்கும் தேமுதிக

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைமை செயற்குழு கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள அந்த தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 4, 2018, 06:03 PM IST
சேலம் - சென்னை பசுமை சாலை திட்டத்தை எச்சரிக்கும் தேமுதிக
Pic Courtesy : @VijayakantDMDKParty

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைமை செயற்குழு கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டிலுள்ள அந்த தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேமுதிக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் : 1

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அமைதியான வழியில் 99 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். 100 வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது அப்பாவி பொதுமக்கள் மீது, தமிழக அரசும் காவல்துறையும் சேர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்ற இந்த கொடிய சம்பவத்தை இச்செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 13 பேருக்கும், மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் மரணத்திற்கும், நீட் தேர்வு எழுத தன்னுடைய மகனை கேரளாவிற்கு அழைத்து சென்ற மாணவனின் தந்தை மரணத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்காக பாடுபட்டு, உழைத்து, சிறப்பான முறையில் பணியாற்றி, அண்மையில் இயற்கை எய்திய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் இப்பொதுக்குழு கண்ணீர் அஞ்சலியை செலுத்தி, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறது. அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத்தினருக்கும் இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் : 2

சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை முறைப்படுத்தியும், மக்களின் கருத்துக்களை கேட்டும், அவர்களின் ஒத்துழைப்போடும் நிறைவேற்றுவது மிக அவசியமாகும். சாலை வசதிகளை மேம்படுத்திடவேண்டும் என்பதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு மாற்று கருத்து இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமான விளை நிலங்களை காவல்துறையின் ஒத்துழைப்போடு, அவர்களின் அனுமதியின்றி நில அளவீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திட்டத்தை சிறு, குறு விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றியமைத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்வதோடு, சேலம் – சென்னை பசுமை வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக தேமுதிக போராடும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் : 3

காவிரி நதிநீர் பிரச்சனை நீண்ட காலமாக தேமுதிக மற்றும் அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும், விவசாய பெருங்குடிமக்களும் போராடியதன் பயனாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்று உத்தரவுபிறப்பித்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் திரு.மசூத் ஹுசைன் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில உறுப்பினர்கள் 02.07.2018 கூடிய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டுமென்று காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்ததற்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, வருகின்ற 05.07.2018 அன்று நடைபெறவுள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்று கூட்டத்திலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும் கிடைக்கவேண்டிய தண்ணீரை தமிழக அரசு முறையாக பெற்றுத்தந்து, விவசாயிகளின் வாழ்வு வளம்பெறச்செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 4

தமிழகத்திற்கு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை தங்களுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் எழுதவிடாமல், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதனால் மாணவ, மாணவிகள் மன அழுத்தத்தின் காரணமாக சரியான முறையில் தேர்வு எழுத முடியாமலும், அவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்களும், உறவினர்களும் பல இன்னல்களுக்கு ஆளானதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டது. தமிழக அரசின் முதிர்ச்சியற்ற, முரண்பட்ட கல்வி கொள்கைகளினால் தான் மேற்கண்ட சம்பவங்கள் நடைபெற்றது என்பதை, இச்செயற்குழு சுட்டிக்காட்டுவதுடன், தகுந்த கல்வி நிபுணர்களுடனும் கலந்து, அனைத்து பள்ளிகளும் சிறப்பான நீட் தேர்வு பயிற்சி மையத்தை உருவாக்கிடவும், தேர்வு மையங்களை மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 5

மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்றும், ஒவ்வொரு ஏழை, எளிய குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்கள். மத்தியிலே ஆட்சி ஏற்று நான்கு ஆண்டுகள் முடிந்தும், இதுவரை ஒரு குடும்பத்திற்கு கூட வங்கியில் பணம் செலுத்தப்பட்டதாக தெரியவில்லை. மேலும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பின் காரணமாக தொழில் முனைவோர், அனைத்து தரப்பு வியாபார பெருமக்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளானார்கள். கருப்புப் பணத்தை ஒழித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த மக்கள், சுவிட்சர்லாந்து நாட்டு சுவிஸ் தேசிய வங்கியில் 2017-ல் 50% சதவிகிதம் இந்தியர்கள் பணம் அதிகரித்தாக அறிவித்திருப்பது, இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களை இன்னலுக்கு ஆளாக்கிய ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு நடவடிக்கையும், கருப்பு பணத்தை ஒழிக்காத மத்திய அரசின் நடவடிக்கையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் : 6

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்திட எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த மத்திய அரசின் நடவடிக்கையினால், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர அனைத்துத்தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மத்திய அரசு சென்ற ஆண்டு GST வரியை கொண்டுவந்த போது, பெட்ரோல், டீசல் GST வரிக்குள் கொண்டு வந்திருந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டிருக்காது. உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டுவரவேண்டுமென்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 7

தமிழகத்தில் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதன் விளைவு இன்றைக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய பல நிதிகள் தமிழகத்திற்கு வரவில்லை. அதிமுக அரசின் தோல்வி பயத்தாலும், எதிர்கட்சியான திமுகவின் அலட்சிய போக்காலும், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்கின்ற அவலத்தை செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், தமிழகத்தின் நிதி பங்கீட்டை மத்திய அரசிடம் இருந்து முழுமையாக பெற்றிடும் வகையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 8

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை, தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பு, முற்றுகை போராட்டம் நடத்தி தேமுதிகவினர் கைதும் ஆனார்கள். தேமுதிக போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் இதுநாள் வரையில் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் இருப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 9

ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் பல்கலைக் கழகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு ஆட்சி செய்கின்ற அதிமுக ஆட்சியில், பல்கலைக் கழகங்களில் ஊழல், கல்லூரியில் பயிலும் SC/ST மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டிய நிதியில் ஊழல், போலியான பெயரளவில் கல்லூரி நடப்பதாக மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கியதாக ஊழல், ஆசிரியர் நியமனத்தில் ஊழல், பல்கலைக் கழக கட்டமைப்பில் ஊழல், NRI ஊழல் என்று பல்கலைக்கழக ஊழல்கள் பரந்து, விரிந்து கிடக்கின்றது. பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, மத்திய புலனாய்வு (CBI) துறையின் மூலமாக விசாரித்து, தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 10

தமிழகத்திலே எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொண்டே போகிறது. தமிழகத்திலுள்ள மத்திய அமைச்சர் அவர்களே “தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது” என்று குற்றம்சாட்டுகின்ற அளவிற்கு தமிழகம் சீர்கெட்டுக்கிடக்கின்றது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எடப்பாடி தலைமையிலான அரசு, கமிஷன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், நெடுஞ்சாலை துறையில் ஊழல், பொதுப்பணித் துறையில் ஊழல் என தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் தங்களுடைய ஆட்சியிலே ஊழல் மலிந்துகிடக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதைப்போல, எத்தனை சதவிகிதம் கமிஷன் வாங்குவது எப்படி என்பதைப் பற்றி தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் பொது நிகழ்ச்சிகளில் விவாதித்துக் கொள்வதை ஊடகங்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும், பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே தமிழகத்திலே நடக்கின்ற வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் : 11

தமிழகத்தில் உள்ள தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற மத்திய அரசின் திட்டத்தையும், இந்திய திருநாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தகுந்த தரமான சிகிச்சை பெறுகின்ற வழியில் மத்திய அரசு அமல்படுத்த இருக்கின்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் இச்செயற்குழு வரவேற்கிறது. சிறந்த சிகிச்சை என்பது மருத்துவர்களின் சேவையினால் மட்டுமல்லாது, போதிய நிதி வசதியுடன் அமைந்திட வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சிகிச்சைக்கான நிதி போதுமானதாக இல்லை என்பதுடன், மிகவும் குறைந்த மதிப்பீட்டில் உள்ளது. இது தரமற்ற சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்பதுடன், சிகிச்சைக்கான செலவுத்தொகையை உயர்த்தி, தரமான சிறந்த சிகிச்சை வழங்கிட மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 12

விவசாய பயிர் பாதுகாப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்தி, முழுபயனையும் விவசாயிகளுக்கு விரைந்து உடனடியாக கிடைத்திட ஆவண செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 13

டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, டீசல் மீதான வரி குறைப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, இந்தியா முழுவதும் உள்ள 68 லட்சம் லாரி உரிமையாளர்கள் ஜூலை 20 ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள். குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் ஏற்றிச் செல்லுகின்ற டேங்கர்லாரிகள் கூட போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை உடனடியாக அழைத்து பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 14

சென்னையில் நடைபெற்று வந்த அம்பேத்கார் சட்டக்கல்லூரியை திருப்போரூர் அருகே புதுப்பாக்கத்திலும், மேலும் திருவள்ளூர் பட்டறை பெரும்புதூரில் புதிய அரசு சட்டக்கல்லூரி திறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டில் புதிதாக சேருகின்ற சட்டக்கல்லூரி மாணவர்களை புதிதாக திறக்கப்பட்ட சட்டக்கல்லூரியில் சேர்த்திடவும், ஏற்கனவே சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை அவர்கள் படிப்பு முடியும் வரை புதிய கல்லூரிக்கு மாற்றாமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், புதியதாக திறக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி, உணவு வசதி, போன்ற அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.