தமிழகத்தில் வரும் மே 27-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் வரும் மே 27-ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரையில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது., இத்துடன் காலியானதாக அறிவிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றது.
இதனையடுத்து வரும் மே 19 அன்று நடைபெறவுள்ள 7-ஆம் கட்ட வாக்குப்பதிவுடன், தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 23-ஆம் நாள் எண்ணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வரும் மே 27-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் பின்வாங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.