தேர்வு விதி மாற்றம் என்ற பெயரில் மாணவர்கள் வாழ்வில் அண்ணா பல்கலைக்கழகம் விளையாடக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்த புதிய தேர்வு விதிகளை மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்வி மாணவர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். பருவத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் வரையறுக்கப்பட்ட காலத்தை விட குறைந்தது ஓராண்டுக்கு பிறகே படிப்பை முடிக்க வழி வகுக்கும் புதிய விதிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் புதிய தேர்வு விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி முதல் பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் ஒரு மாணவர் தோல்வியடைந்தால், அந்த பாடத்திற்கான தேர்வை அவர் மூன்றாவது பருவத்தில் மட்டும் தான் எழுத முடியும். அதேபோல், எந்த பருவத் தேர்வில் ஒரு மாணவர் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்த பருவத்தில் அப்பாடத் தேர்வை அவரால் எழுத முடியாது. மாறாக ஓராண்டு கழித்து வரும் பருவத்தில் தான் அவர் தேர்வெழுத முடியும்.
உதாரணமாக நான்காம் ஆண்டின் முதல் பருவத்தில், அதாவது ஏழாவது பருவத்தில், ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர் எட்டாவது பருவத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டால் அவர் வரையறுக்கப் பட்ட 4 ஆண்டுகளில் படிப்பை முடித்து பட்டம் பெறுவார். ஆனால், புதிய விதிகளின்படி ஏழாவது பருவத்தில் தோல்வியடைந்த மாணவர், எட்டாவது பருவத்தில் தேர்வு எழுத முடியாது. மாறாக ஒன்பதாவது பருவத்தில் தான் தேர்வெழுத முடியும் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவர் ஓராண்டை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, ஒரு பருவத்தில் அதற்குரிய தாள்களுடன், கடந்த காலத்தில் தோல்வியடைந்த தாள்களில் அதிகபட்சமாக 3 தாள்களை மட்டும் தான் கூடுதலாக எழுத முடியும்.
அதன்படி, நான்காவது ஆண்டில் ஒரு மாணவர் நான்கு தாள்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர் படிப்பை முடிக்க கூடுதலாக இரு ஆண்டுகள் ஆகும். இது பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் உயர்கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். இது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017-18ஆம் கல்வியாண்டுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு மாணவர் எத்தனைப் பாடங்களில் தோல்வியடைந்திருந்தாலும், அவர் அவற்றை எந்தப் பருவத்தில் வேண்டுமானாலும் எழுத முடியும். அதனால், பொறியியல் படிப்பின் முதல் 3 ஆண்டுகளில் பல பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் கூட, அனைத்துப் பாடங்களுக்கான தேர்வுகளையும் கடைசி ஆண்டின் இரு பருவங்களில் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்போதும் அனைத்து தமிழக பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறை தான் தொடர்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றதாகும்.
பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் அந்தந்தப் பாடங்களை அந்தந்தப் பருவங்களில் தேர்ச்சி பெற்றால் இந்தப் பிரச்சினையே ஏற்படாதே? என்ற வாதம் முன்வைக்கப்படலாம். முறையாகப் படிக்காத மாணவர்களுக்காக குரல் கொடுப்பதா? என்று வினா எழுப்பப்படலாம். அப்படி எழுப்பப்பட்டால் அவை தவறான வாதங்களாகவே இருக்கும்.
தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் அனைவருமே படிக்காத மாணவர்கள் அல்ல. தேர்வுகளில் தோல்வியடைய பல காரணங்கள் உள்ளன. உடல்நலக் குறைவு, குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் பல மாணவர்களால் தேர்வு எழுத முடியாத நிலைமை ஏற்படலாம். பல தனியார் கல்லூரிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதால் அவற்றின் மாணவர்கள் கடுமையாகப் போராடியே தேர்ச்சி பெற வேண்டியுள்ளது என்பதை பல்கலை. நினைவில் கொள்ள வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை திருத்துவதில் ஏராளமான குளறுபடிகளும், ஊழல்களும் நடக்கின்றன. நன்றாக தேர்வு எழுதிய மாணவர்களை தோல்வியடையச் செய்வதும், சரியாக தேர்வு எழுதாத மாணவர்களை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடையச் செய்வதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.
விடைத்தாள்களை திருத்துவதில் நடந்த ஊழல் பற்றி விசாரணையும் நடைபெற்று வருகிறது. உண்மை நிலையும், எதார்த்தமும் இவ்வாறு இருக்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வி விதி நடைமுறை சாத்தியமற்றதாகும். எனவே, புதிய தேர்வு விதிகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேர்வு விதிகளையே பல்கலை. மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.