உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தடுப்புக்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து உலக அளவில் தமிழகத்திர்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்!!
கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் அல்லாது உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தடுப்புக்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து உலக அளவில் தமிழகத்திர்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சுகாதார துறையின் சார்பில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார், 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை சென்னை MRC நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது, முதலமைச்சர் எடப்பாடி இந்நிகழ்ச்சியில் பேசுகையில்... தமிழக அரசு சுகாதார துறையின் திட்டங்களால் கவரப்பட்டு, அண்டை மாநில அரசுகளும் அவற்றை செயல்படுத்தி வருவதாக பெருமையுடன் கூறினார். மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தர சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அவசரம் மற்றும் தலை காயத்துக்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு இந்த திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா-க்கு உலகில் இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் அதற்கான மருந்தை தங்களது திறமையால் மருத்துவர்கள் கண்டுபிடித்து நாட்டிற்கே முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
சீனாவைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரசால், 8,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஈரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டும் 81 சதவீதம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.