திமுக தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்காது: எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswamy: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது தற்போது அதிமுக ஒரு சதவிகிதம் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 14, 2024, 11:28 AM IST
  • கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்று திமுகவினர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
  • 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது தற்போது அதிமுக ஒரு சதவிகிதம் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.
  • அதிமுகவை போன்று திமுகவும் தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க முடியாது.
திமுக தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்காது: எடப்பாடி பழனிசாமி title=

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றதாகவும் சட்டமன்றத்திற்கு ஒரு மாதிரியும் எப்போதும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியும் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலை உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சி அமைப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்று திமுகவினர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்ற அதிமுக பொதுச்செயலாளரும்  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது தற்போது அதிமுக ஒரு சதவிகிதம் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகவும்,  அதே வேளையில் திமுகவிற்கு 6.59 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும்  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். அதேபோல் பாஜகவிற்கும் 0.2 சதவீதம் வாக்குகள் சரிவடைந்துள்ள நிலையில் அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டதாக கூறப்படுவது தவறானது என்றும் அவர் சுட்டி காட்டினார். 

திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், அதே போல் பாஜகவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே பி நட்டா, நித்தின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் தான் மட்டுமே அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், முன்னாள் அமைச்சர்கள் ஆங்காங்கே பொறுப்பில் இருந்ததால் தமிழகம் முழுவதும் அவர்களால் செல்ல இயலவில்லை என்றும் சுட்டி காட்டினார்.

மேலும் படிக்க | ஜூஸ் மெஷினில் ரூ.1.83 கோடி தங்கம் பறிமுதல்; திருச்சி விமான நிலையத்தில் அதிரடி

மேலும் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து இருப்பதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளையும் அதிமுக வென்றதாகவும், அதே போல் தமிழகத்திலும் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக விஷம பிரச்சாரம் செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுகவிற்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

அதிமுகவை போன்று திமுகவும் தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும், நாடாளுமன்றத்திற்கு ஒரு மாதிரியும் சட்டமன்றத்திற்கு ஒரு மாதிரியும் தான் மக்கள் வாக்களிக்கின்றனர் என்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகளை பெற்று தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் இந்தியா கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் தான் போட்டி இருந்தது, ஆனால் அதிமுக தமிழக உரிமைகளைக் காக்க நடுநிலையோடு இருந்தது என்றும் கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என திமுகவினர் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார். 

இதேபோல் நாடாளுமன்ற  தோல்விக்கு பிறகாவது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து வலுத்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி கிடையாது, வாக்கு சதவீதம் அதிகரித்து தான் இருக்கிறது என்றும் அவர்கள் பிரிந்து சென்றதற்கு பிறகு தான் அதிமுகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், எனவே பிரிந்து சென்றவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது, கட்சி பலமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், வருகிறவர்கள் போகிறவர்கள் அமைப்பதெல்லாம் ஒரு குழுவா என்றும், ரோட்டில்  வருவோர் போவோர் எல்லாம் சேர்ந்து குழு உருவாக்கினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க | Senthil Balaji: ஒரு வருடமாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி! பண மோசடி வழக்கும் ஜெயில் பயணமும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News