தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!
வடமேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், வங்கக்கடலில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்றுவீசக் கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் நாளை கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; தென் மேற்கு பருவ காற்று தொடர்ந்து வலுவாக உள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ., மேல்பவானியில் 24 செ.மீ., சின்னக்கல்லாரில் 23 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., வால்பாறையில் 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ., வரை வேகமாக காற்று வீசக்கூடும். இதனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அந்தமான் கடல் பகுதிக்கு, அடுத்த 3 நாட்கள் செல்ல வேண்டாம். அவலாஞ்சியில் 82 செ.மீ., மழை பெய்தது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். மும்பையில் , 95 செ.மீ., மழை பெய்ததே அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.