ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார்.
ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஓசூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அவர் பதவியிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.