குன்னூர்: சமீபத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உடைந்த பாகங்களை எவ்வாறு சூலூருக்கு கொண்டு செல்வது என்பது பற்றி விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ALSO READ | இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது?
மேலும் ஹெலிகாப்டரில் இருந்த எரிபொருட்கள் வெடித்து சிதறியதால் கிட்டத்தட்ட 30 அடி உயரம் வரை தீ பற்றி எரிந்ததில் ஹெலிகாப்டரின் பாகங்கள் அதிக அளவில் சேதமடைந்தது. இருப்பினும் ஹெலிகாப்டரின் இறக்கை, வால், முன்பகுதி, எஞ்சின், ரோட்டா போன்ற சில பாகங்கள் ஓரளவு எரிந்த நிலையிலும், நல்ல நிலையிலும் கிடைத்தது. இவை கைகளால் எடுத்துச்செல்ல முடியாத அளவிற்கு அதிக எடை கொண்டவை, அதனால் இந்த பாகங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அவற்றைப் பாதுகாக்க ராணுவத்தினர் கையில் துப்பாக்கி ஏந்தி இரவும், பகலுமாக பாதுகாத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினரும், விமானப் படையினரும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் சேகரிக்கப்பட்ட பாகங்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி கலந்தாலோசித்தனர். பின்னர் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், வனத்துறை மற்றும் கிரேன் ஆபரேட்டர்கள் ஆகியோரை அழைத்து அவர்களிடம் சில ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
அதில், ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தின் கீழ்பகுதியில் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதி வழியாக ஒரு சாலை அமைத்து அதன் வழியாக வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்லலாமா? அல்லது மேலே உள்ள தேயிலை தோட்டம் வழியாக ஹெலிகாப்டரின் பாகங்களை எடுத்து செல்லலாமா? என்று ஆலோசித்தனர். ஆனால் வனப்பகுதி வழியாக சாலை அமைத்து வாகனத்தில் செல்லும்போது குறுக்கே உள்ள மரங்களை வெட்டவேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு மரங்களை வெட்டி அகற்றுவது சாதாரண காரியமல்ல, இதற்கு பல நாட்கள் ஆகும். இதனால் ஹெலிகாப்டரின் பாகங்கள் சூலூருக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை பத்திரமாக கொண்டு செல்ல நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR