அ.தி.மு.க ஆட்சியில் “தாது மணல் குத்தகை குவாரிகளில்” நடைபெற்ற ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க ஆட்சியில் வி.வி. மினரல்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் “தாது மணல் குத்தகை குவாரிகளில்” நிகழ்த்தியுள்ள முறைகேடுகள் குறித்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான “சிறப்பு விசாரணைக் குழு”வின் 1170 பக்க அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ள பல உண்மைகள் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது.
“ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடி மெட்ரிக் டன் தாதுமணல் 52 தாதுமணல் குவாரிகளில் இருந்து அள்ளிச்செல்லப்பட்டுள்ளதாக” சுட்டிக்காட்டப் பட்டுள்ள அந்த அறிக்கை கார்னட் ஊழலின் இமயமாக காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள தாதுமணல் குவாரிகளின் முறைகேடுகள் பட்டவர்த்தனமாக விளக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் விசாரணை முடிவுகள், அரசு கஜானாவிற்கு ஏற்படுத்தியுள்ள “வரலாறு காணாத இழப்பை” வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
“மூன்று மாவட்டங்களிலும் 580 ஏக்கர் நிலங்களில் சட்ட விரோதமாக தாது மணல் குவாரிகள் செயல்பட்டுள்ளன; சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகள் பெறப்படவில்லை; குவாரி இல்லாத இடங்களுக்கு தாது மணலை எடுத்துச் செல்லும் போக்குவரத்து அனுமதிச் சீட்டு (Transport Permit) வழங்கப்பட்டுள்ளது. குவாரியில் எடுக்கப்படும் தாதுமணலின் அளவைக் காட்டிலும் அதிகமாக அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.
குவாரிகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதிகள் பெறப்படவில்லை; அரசு புறம்போக்கு நிலங்களில் தாதுமணல் குவாரிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்கு வர வேண்டிய குத்தகைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அரசு புறம்போக்கில் உள்ள தாதுமணல் குவாரிகளில் மட்டும் 17 லட்சம் மெட்ரிக் டன் தாதுமணல் அள்ளப்பட்டுள்ளது;
ஐந்து ஏக்கருக்கு தாதுமணல் குத்தகை வழங்கப்பட்டிருந்தால் “தாதுமணல் எடுத்துச்செல்லும்” அனுமதி 10 ஏக்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது; நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மோனோசைட்டில் தனியாருக்கு உரிமம் அளிக்கப்படக்கூடாது; ஆனால், 9 மோனோசைட் குவாரிகள் குத்தகை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன;
52 தாதுமணல் குவாரிகளில் 38 குவாரிகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டுள்ளது; கார்னட் மணலின் விலை டன்னுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை போன காலகட்டத்தில் கார்னட் மணலின் விற்பனை விலை மெட்ரிக்கு டன்னுக்கு வெறும் 377 ரூபாய் என்று நிர்ணயிக்க பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அறிக்கை நிற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவைப்படும் மோனோசைட் குவாரிகள் பற்றி சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் அளிக்கும் விவரங்களை கூறியிருக்கிறது. அதில், "9 மோனோசைட் குவாரிகளில் எடுக்கப்பட்ட மோனோசைட் அளவு, அது எப்படி பிரித்தெடுக்கப்பட்டது, அதன் கையிருப்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் குத்தகைதாரர்களிடம் இல்லை. என்றும், “தாது மணல் குத்தகைதாரர்களின் தாதுமணல் எடுக்கப்பட்டது குறித்து தாக்கல் செய்துள்ள வணிகவரித்துறை கணக்கிற்கும், கஸ்டம்ஸ் கணக்கிற்கும் வேறுபாடு இருக்கிறது.
அள்ளிச் செல்லப்பட்ட கார்னட் மணல் கணக்கும், அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து அனுமதி சீட்டுக்களின் கணக்கும் ஒத்துப் போகவில்லை” என்றும் பளிச்செனக் குறிப்பிட்டு, “அரசுக்கு வர வேண்டிய ராயல்டி தொகையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று பேரதிர்ச்சி தரும் விவரங்களை அறிக்கையாகக் கொடுத்திருக்கிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான “சிறப்பு விசாரணைக்குழு”.
ஏற்கனவே, ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் “தாதுமணல் ஊழல்” நடைபெற்றுள்ளது என்று செய்திகள் வெளிவந்த போதெல்லாம் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. பிறகு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் 6.8.2013 அன்று அரசுக்கே ஒரு கடிதத்தை எழுதி, விசாரிக்க கோரிக்கை விடுத்ததால், வேறு வழியின்றி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் விசாரணையை முடக்கவும், திரு ககன் தீப் சிங் பேடியை நீக்கவும் “வி.வி. மினரல்ஸ் நிறுவனமும்”, அ.தி.மு.க அரசும் இணைந்து எடுத்த முயற்சிகளை சென்னை உயர்நீதிமன்றம் முறியடித்தது. பிறகு, சிறப்பு விசாரணைக் குழுவை ககன்தீப் சிங் பேடி அவர்கள் 17.9.2013 அன்றே விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்து அந்த அறிக்கையின் ரகசியத்தை பேணிக் காப்பாற்றியது அ.தி.மு.க அரசு.
இதுகுறித்து பொது மேடைகளிலும், சட்டமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம் அவற்றை அலட்சியம் செய்து, முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் 4 வருடங்களாக “தற்காத்து” நின்றது அ.தி.மு.க அரசு.
குறிப்பாக முதலமைச்சராக இருந்த திரு ஓ. பன்னீர்செல்வமும், தற்போது முதலமைச்சராக இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமியும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் “முதன்மைக் காவலாளிகளாக” நின்றார்கள். இன்றும் நிற்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்த விசாரணை அறிக்கையை வெளியிட விடாமல் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் அ.தி.மு.க அரசு துணை போனது. அ.தி.மு.க அரசும், வி.வி.மினரல்ஸ் நிறுவனமும் கூட்டுச் சதி செய்து இந்த தாதுமணல் முறைகேட்டை எவ்வாறு மூடி மறைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பு விசாரணைக்குழுவின் முழு அறிக்கையிலும் அடங்கியுள்ளது.
ஆகவே, 52 குவாரிகளில் நடைபெற்றுள்ள தாதுமணல் குவாரிகள் குறித்த விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 1 லட்சம் கோடி மெட்ரிக் டன் தாது மணலுக்குரிய ராயல்டி மற்றும் இதுவரை அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குவாரிகளுக்கு வசூலிக்கப்படாத குத்தகைக் கட்டணம், அதற்குரிய அபராதம் ஆகியவற்றை உடனடியாக வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
மோனோசைட் (அணுசக்தி கழகங்களில் பயன்படுவது) விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பிற்கு விரோதமான முறைகேடுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். தாதுமணல் குவாரிகளால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் தீமைகளுக்கு சம்பந்தப்பட்ட வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அபாரதம் வசூலிக்க வேண்டும்.
திரு ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். அவர்களின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரு வேளை முதலமைச்சர் அதற்குத் தயங்கினால், நாட்டின் பாதுகாப்பிற்கே பேராபத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் நடத்தியுள்ள மோனோசைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மத்திய அரசே நேரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக மீண்டும் தாதுமணல் குவாரிகளை அனுமதிக்க மாண்புமிகு முதலமைச்சர் திரைமறைவில் பேரம் பேசிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் தாதுமணல் குவாரிகளைத் திறக்க மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.