எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும் குடிமராத்து பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்த விபரங்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது!
மாநிலம் முழுவதும் வறட்சியால், ஏரிகள், பாசன கால்வாய்கள் வறண்டு கிடக்கின்றன. இவற்றை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்க, அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 499 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியை பயன்படுத்தி, 1,829 ஏரிகள் மற்றும் கால்வாய்களில், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளன. பல மாவட்டங்களில், இந்த பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளில், வெளிப்படை தன்மை இல்லை என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் 'பணிகள் குறித்த விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' எனவும், தி.மு.க., - காங்., தரப்பில், சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது, பதிலளித்த முதல்வர், பழனிசாமி 'குடிமராத்து திட்டப் பணிகள், முறையாக நடந்து வருகின்றன. இதுகுறித்த முழுமையான விபரங்கள், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும்' என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கி வரும், நீர்வளத் துறையின், www.wrd.tn.gov.in என்ற இணையதளத்தில், 2019 - 20ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்திற்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல, 2016 - 17 மற்றும் 2017 - 18ம் ஆண்டுகளில் நடந்த, குடிமராமத்து பணி விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பணிகள் முடிந்த பின்னர் அதுகுறித்த புகைப்படங்களை, இணையதளத்தில் வெளியிடவும், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.