ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசு எச்சரிக்கை!

Last Updated : Jan 27, 2019, 06:19 PM IST
ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசு எச்சரிக்கை! title=
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். ஒரே பிரிவில் இருக்கும் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களை மூடக்கூடாது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இவர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேலானோரை கைது செய்தது. ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. 
 
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது.
 
அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். அப்படி வர தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஜனவரி 28ம் தேதிக்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News