நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.
மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது.
அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை 2 கார்களில் வந்த முகமூடி கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்து 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தனர். மேலும் 9-வது கேட்டில் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து முகமூடி கும்பல் ஜெயலலிதாவின் அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலலிதா அறையில் இருந்த 3 சூட்கேஸ்கள் திறக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். ஆனால் அதில் என்ன இருந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை.
இதற்கிடையே இந்த கொலை - கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜெயலலிதா இருக்கும்போது அடிக்கடி கொடநாடு வந்து சென்ற சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூரின் ரத்த மாதிரி, கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இவை இரண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணையில் இப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓம் பகதூரைக் கொன்றது, உடன் இருந்த கிருஷ்ண பகதூர்தான் என்பதை போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலைசெய்துள்ளார்.
பிறகு, அந்தக் கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். ஆனால், அந்தக் கையுறையில் ஒரு விரல் மற்றும் எரியவில்லை. இந்தத் தடயத்தைக் காவல்துறை கைபற்றி, ஆய்வு செய்தது. அந்தக் கையுறையில் இருந்த கைரேகையை ஆய்வுசெய்தபோது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. எனவே, கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது.