சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டது.....
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டு சிலைகள் செய்யும் பணிகள் ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் 8 அடி உயரத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் 55 வயதுத் தோற்றத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஆந்திராவுக்கு சென்ற அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளை பார்வையிட்டனர். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் உருவச்சிலை கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துனைமுதலவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.