பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்!

Last Updated : May 10, 2017, 08:30 AM IST
பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்! title=

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். அதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபோகம் இன்று நடைபெற்றது. 

பச்சைப் பட்டு உடுத்தி, அலங்காரம் செய்யப்பட்ட கள்ளழகர் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளினார். இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் ஆரவாரம் எழுப்பினர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதனைக் காண குவிந்திருந்தனர். 

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மூன்றுமாவடிக்கு வந்தார். அப்போது எதிர்சேவை நடைபெற்றது. பின்னர் கண்டாங்கி பட்டு, வேல் கம்பு ஆகியவற்றுடன் பக்தர்கள் வழிபட்டனர். 

இதையடுத்து மாலை மண்டகப்பட்டியில் எழுந்தருளினார். இரவு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நள்ளிரவு கருப்பணசாமி திருக்கோவில் அருகே ஆயிரம்பொன் சப்பரத்தில் அருள்பாலித்தார்.

பின்னர் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர் நின்று வரவேற்றார். பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. பக்தர்கள் வருகையை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.

Trending News