ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தாஜ்மஹால் வயதான கட்டிடம் என்பதால் அது மண்ணில் புதைந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அப்படித்தான் கருணாநிதி வயதானவர் என்பதால் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கருணாநிதி ஓர் எழுத்தாளராகவும், போராளியாகவும், கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் வாழ்ந்திருக்கிறார். தமிழகத்தின் புரட்சிகர தலைவர் மறைந்துவிட்டார்.
மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார். ஆனால், ஏழை விவசாயிகளுக்கு அவர்தான் இலவச மின்சாரம் வழங்கினார். அவர் முறையான கல்வி கற்கவில்லை. ஆனால், இலவச கல்வி வழங்கினார். பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கினார். தமிழ் மொழி வாழும்வரை கருணாநிதி வாழ்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.