கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறைக் காற்று வீசுவதால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைய துவங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனையொட்டியுள்ள, கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், குறும்பனை, அழிக்கால், கடல் பகுதிகளில் சூறைக்காற்றுடன், கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், தொடர்ந்து மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிப்பு தடைப்பட்டுள்ள நிலையில் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டு, குளச்சல் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
முன்னதாக கேரளாவின் மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18-ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கை, 19-ஆம் தேதி ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதேவேளையில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18-ஆம் தேதி தீவிரமடைந்த பருவமழை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையின்கீழ், கோவளம், விழிஞ்சம், வடகரா போன்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.