வழக்கறிஞர்களுக்கு தொழிலில் பக்தி வேண்டும் - நீதிபதி சுப்பிரமணியன்!

வழக்கறிஞர்கள் என்பவர்கள் தொழிலுக்காக செயல்பட வேண்டும் மற்றும் தொழிலில் பக்தி வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ரா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2023, 08:03 AM IST
  • சட்டக் கல்லூரி என்பது லைசன்ஸ் தான்.
  • கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
  • தொழிலை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
வழக்கறிஞர்களுக்கு தொழிலில் பக்தி வேண்டும் - நீதிபதி சுப்பிரமணியன்! title=

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி கடந்த 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.  இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 18 அணிகளை சேர்ந்த 54 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். அதற்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது, இதில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ரா.சுப்பிரமணியன் மற்றும் நீதியரசர் சி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் படிக்க | இனி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -தமிழ் மகன் உசேன்

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் ரா. சுப்ரமணியன், மாதிரி நீதிமன்றங்கள் தற்காலத்தில் நிறைய நடக்கிறது. இது சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாகும். நாங்கள் படிக்கும் போது அது போல இல்லை. சட்டக் கல்லூரியை விட்டு நீங்கள் வெளியே செல்லும்போது எதை நோக்கி செல்ல உள்ளீர்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். வழக்கறிஞர் என்பவர்கள் முழு நேரத்தையும் தொழிலுக்காக செயல்பட வேண்டும், தொழிலில் பக்தி இருக்க வேண்டும். வழக்கறிஞர் என்றால் மூன்று நிலை உள்ளது. முதல் நிலையில் உழைப்பு அதிகமாக இருக்கும். இரண்டாவது நிலையில் உழைப்பும், பணமும் சமமாக கிடைக்கும். மூன்றாவது நிலையில் பணம் அதிகமாக கிடைக்கும். மூன்றாவது நிலைக்கு செல்ல நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது ஐந்தாண்டு சட்டக் கல்லூரி படிப்பில் நிறைய படிக்க வாய்ப்பு உள்ளது. சட்டக் கல்லூரி என்பது லைசன்ஸ் தான். கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. 

ஒரு வழக்கறிஞர் என்பவர் நீதிபதியிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற நடைமுறையை தெரிந்து கொள்ள வேண்டும். கட்சிக்காரர்களுக்கான உத்தரவை வழக்கறிஞர் வாங்கி தர வேண்டும். அதற்காக தவறான பாதையில் யாரும் செல்லக்கூடாது. தொழிலை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வழக்கறிஞர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கை எப்படி நடத்துவது என்பதையும் தயார் செய்ய வேண்டும். வேலை செய்ய தயக்கம் இருக்க கூடாது. தற்போது வழக்கறிஞர் தொழில் நன்றாக தான் உள்ளது. வக்கீல்கள் நீதிபதிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நான் வழக்கறிஞர் தொழில் செய்ய ஆரம்பித்த போது எனக்கு மாத சம்பளம் 250 ரூபாய் தான். பணம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காக  வருத்தப்படக்கூடாது. தொழிலில் மேலே நிறைய இடம் உள்ளது. அதனை நீங்கள் நிரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதியரசர் சி.சரவணன் பேசுகையில், தமிழை பாடமாக படிக்க வாய்ப்பு இல்லாதவன் நான். தமிழை நானே சுயமாக கற்றுக் கொண்டேன். தமிழுக்கும் நீதிக்கும் பெரும் தொடர்பு உள்ளது. திருக்குறள்,அகநானூறு, புறநானூறு ஆகியவற்றை படிக்க வேண்டும். தமிழில் மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்திய கல்லூரிக்கு எனது பாராட்டுக்கள் வக்கீல்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் நிறைய தத்துவ புத்தகங்களை படிக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு சிறந்த தொழிலாகும் என்று பேசினார். விழாவில் சட்டக் கல்வி இயக்குனர் ஜெ.விஜயலட்சுமி பேசுகையில், யார் அதிகமாக, கடினமாக உழைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் உயர்வார்கள். முன்னேறுவார்கள். மாணவர்களுக்கு வெற்றி தோல்வி என்பது முக்கியமில்லை. போட்டியில் பங்கு பெற்றதே சந்தோஷம் தான். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றார்.

மேலும் படிக்க: 'இனி கட்சிக்கும் ஓபிஎஸ்-க்கும் தொடர்பு இல்லை... நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான்' - இபிஎஸ் பிடிவாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News