மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் அசாம் மாநில முதல்-மந்திரி சர்வானந்த சோனோவலுக்கு மதிமக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அஸ்ஸாம்-மேகாலயா தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரியான (2006 பிரிவு) டாக்டர் என். இராஜமார்த்தாண்டன், அஸ்ஸாம் மாநில குற்றப் புலனாய்வுத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் தேமாஜி மாவட்டம், சிலாபத்தர் நகரத்தில், கடந்த மார்ச் 6-ம் நாள் நிகழ்ந்த வன்முறைகள் குறித்துப் புலனாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.
நிகில் பாரத் பெங்காலி உத்பஸ்து சமான்னய சமிதி (நிப்பஸ்) என்ற, வங்கதேசத்தில் இருந்து வந்த, வங்க மொழி பேசும் இந்துக்கள் அமைப்பு ஒன்று, தங்களுக்கு இந்தியக் குடி உரிமை கோரி ஒரு பேரணியை ஏற்பாடு செய்து இருந்தனர். அப்போது, அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்க அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர். அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிப்பஸ் அமைப்பினர் சில தகவல்களைக் கேட்டு விண்ணப்பித்ததன் அடிப்படையில், டாக்டர் ராஜமார்த்தாண்டன், அஸ்ஸாம் மாநிலக் காவல்துறை, அந்தப் போராட்டம் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் சில தகவல்களை அளித்து இருக்கின்றார். இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஏப்ரல் 7-ம் நாள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜூன் 12-ம் நாள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனக்குத் தெரிந்த அளவில், தமிழகத்தின் பழம்பெருமை மிக்க கோவில் நகரமான மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜமார்த்தாண்டன் ஒரு நேர்மையான அதிகாரி என்பதுடன், 2015, 2016 ஆம் ஆண்டுகளில் சிறப்பாகப் பணி ஆற்றியமைக்காக அரசு விருதும் பெற்றுள்ளார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம் அதிகாரியின் எதிர்காலத்தைக் கனிவுடன் கருத்தில் கொண்டு, அவரது பணி இடை நீக்கத்தை இரத்துச் செய்து பாதுகாத்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு தமது கடிதத்தில் வைகோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.